அட்டமஸ்தான பிக்குகள் ஆற்றியுள்ள சேவைகள் மகத்தானவை - ஞானசார தேரர்
இவர்களது அநாகரிகமான போக்கை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அநுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட இடங்கள் நாட்டின் அடையாளங்கள். அட்டமஸ்தானத்தின் பொறுப்பிலுள்ள பிக்குகள் ஆற்றியுள்ள சேவைகள் மகத்தானவை. மனிதர்களாக இருக்கும்போது தவறுகள் நடப்பது இயல்பு. ஏதேனும் தவறு நடந்திருந்தால், அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, வீதிகளில் இறங்கிப் போராடுவதோ அல்லது அவதூறு பேசுவதோ முறையல்ல பௌத்தர்கள் இத்தகைய தருணங்களில் நடுநிலையாக மனநிலையுடனும் வதந்திகளுக்கும் ஆதாரமற்ற அவதூறுகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் 27-05-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், புத்த பெருமானே உலகுக்கு தோன்றிய முதலாவது உன்னத சாஸ்தாவாவார். இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு, காரண காரிய தர்மத்தைப் போதித்த அவர், உலகுக்கு அகிம்சையை வழங்கிய உன்னத மனிதர். இத்தகைய உன்னத தர்மத்தையும், முக்கோடித் தர்மத்தையும்தான் நாம் நீண்ட காலமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறோம். வரலாறு முழுவதும் 36 ஆக்கிரமிப்புகளையும், சோழ, பாண்டியர்களின் நெருக்கடிகளையும் தாண்டி நிலைபெற்றுள்ள இந்த சாசனத்தை, சில அற்பமான விமர்சனங்களால் அழிக்க முடியாது. எனவே, இவ்வாறான கருத்துக்களைக் கண்டு பௌத்தர்கள் எவரும் குழப்பமடைய வேண்டியதில்லை.
இன்று சில யூடியூப் ஊடகங்கள் தங்களின் தரவரிசை மற்றும் இலாபத்துக்காக, எவ்வித ஆதாரமுமின்றி பிக்குகளையும் சாசனத்தையும் விமர்சிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளன. இவை தேரர்களை முன்கூட்டியே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, ஊடக விசாரணைகளை நடத்தி மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன. பிறரின் குறைகளை விற்றுப் பிழைப்பு நடத்தும் இத்தகையோர், சாசனத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். இவர்களது அநாகரிகமான போக்கை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அநுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட இடங்கள் நாட்டின் அடையாளங்கள். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அந்தத் தலங்கள் இருந்த நிலையையும், இன்று அவை அடைந்துள்ள அபிவிருத்தியையும் மக்கள் சிந்திக்க வேண்டும். அந்தப் பொறுப்பிலுள்ள பிக்குகள் ஆற்றியுள்ள சேவைகள் மகத்தானவை. மனிதர்களாக இருக்கும்போது தவறுகள் நடப்பது இயல்பு. ஏதேனும் தவறு நடந்திருந்தால், அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, வீதிகளில் இறங்கிப் போராடுவதோ அல்லது அவதூறு பேசுவதோ முறையல்ல. சட்டத்தை எவரும் கையில் எடுக்கக்கூடாது.





