மானுட நேயமிக்க அரசொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: தொழில் அமைச்சர்கள் தெரிவிப்பு
கடந்த காலங்களில் அரசாங்கங்கள் சரியான பாதையில் பயணிக்காத காரணத்தினாலேயே பல பிரச்சினைகள் உருவெடுத்தன.
மானுட நேயத்திற்கு மதிப்பளிக்கும் அரசொன்றைக் கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென தொழிலாளர் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் திணைக்களத்தின் ஆணையாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு திணைக்களத்தின் எதிர்காலப் பயணங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் 26-02-2026 அன்று வி சேட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலில் காணப்படக்கூடிய பாரிய ஆபத்து என்னவென்றால் அதனைத் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகும். அமைச்சருக்கு வேண்டியதைச் செய்வது அல்லது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அரசியலைப் பயன்படுத்துவதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இதனை வெறும் வாய் வார்த்தையாகக் கூறாமல் எமது செயல்கள் மூலம் ஏற்கனவே நிரூபித்துள்ளோம். திறந்த மனதுடன் சிந்திக்கும் எவருக்கும் இது தெளிவாகப் புரியும்.
கடந்த காலங்களில் அரசாங்கங்கள் சரியான பாதையில் பயணிக்காத காரணத்தினாலேயே பல பிரச்சினைகள் உருவெடுத்தன. ஆட்சியாளர்கள் தவறான பாதையில் செல்லும்போது ஏனையவர்களும் அந்தத் தவறான பாதையையே பின்பற்ற நேரிட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதால் அனைவரும் அந்த நேர்மையான பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஊழல் மற்றும் மோசடிகளுக்குப் பெயர் போன பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றி மானுட நேயம் மற்றும் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் எவரும் இந்த நோக்கத்திலிருந்து தன்னிச்சையாக விலகிச் செல்ல முடியாது என்றார்
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்களம் தொடர்பில் மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் எதிர்மறையான நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் இந்தச் செயலமர்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசுரியவினால் 'தொழிலாளர் நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்றம்' எனும் தலைப்பிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அரோஷா எஸ். அதிகாரத்தினால் பணிபுரியும் இடங்களில் இடம்பெறும் துன்புறுத்தல்களைத் தடுத்தல் எனும் தலைப்பிலும் விசேட விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த மாநாட்டில் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதிகா ஒவ்வலியத்த உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





