விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்: பேராயர் இல்லம்
தாக்குதல்களால் உயிரிழந்துள்ள மற்றும் வாழ் நாள் முழுவதும் அங்கவீனமுற்றுள்ளவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படும்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளை இதனுடன் தொடர்புபடுத்தி சமூகத்தை தவறாக வழிநடத்த சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். விசாரணைகளைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகவே அமையும் என கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் 26-02-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உளவுத்துறையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி வெளியானதிலிருந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். கத்தோலிக்க சபை என்ற ரீதியில் இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக இதன் பின்னணியிலுள்ள உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
கோட்டா, ரணில் ஆட்சிகளில் விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை
கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதுடன் இத்தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் முற்றாக மந்தமாக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இந்தப் படுகொலைகளின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாம் கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கு சுயாதீன விசாரணைகள் இன்றியமையாதவை. தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னரே இந்த விசாரணைகள் மீளவும் முறையாக ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சலே கைதுக்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன
2024 நவம்பரிலிருந்து 2026 பெப்ரவரி வரையான 16 மாத காலத்தில் குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகள் முறையாக ஒழுக்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிள்ளையானுடைய முன்னாள் செயலாளர் அசாத் மெனலானா செனல் 4 செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிதாக இவ்விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் 16 மாத விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருக்கின்றார். அதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக நாம் நம்புகின்றோம்.
விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
தற்போது அவர் இந்த சம்பவம் குறித்த சந்தேகநபர் மாத்திரமே. அவர் குற்றவாளியா இல்லையா என்பது நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். எனவே இந்த கைது தொடர்பில் பதற்றமடைந்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த விசாரணைகளின் பிரதிபலன் என்ன என்பது தொடர்பில் பொறுத்திருந்து பார்க்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். மாறாக இந்த கைது தொடர்பில் வெ வ்வேறு விமர்சனங்களை முன்வைப்பதை, விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவே நாம் கருதுகின்றோம். கடந்த 8 ஆண்டுகளாக நீதி நிலைநாட்டப்படும் என நாம் பொறுமையுடன் காத்திருந்தோம். ஏனையோரையும் பொறுமையாகவே இருக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
எவரும் சட்டத்துக்கு மேலானவர் அல்ல
இந்த கைதுக்கு வேறு அர்த்தப்படுத்தல்களை வழங்கி சமூகத்தை தவறான வழியில் திசை திருப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். சுரேஸ் சலே யுத்தத்தின் போது இராணுவ அதிகாரியாக இருந்து பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், எனவே அவரை கைது செய்வது தவறானது என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்ப வேண்டும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். நாட்டில் எவரும் சட்டத்துக்கு மேலானவர் அல்ல. சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒருவர் இராணுவ அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருந்தார் என்பது சட்டத்தின் முன் அநாவசியமானதொரு வாதமாகும். சுமார் 300 அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இந்த படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட்டால், நாட்டில் சட்டம் சுயாதீனமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தப்படும். அவ்வாறில்லை என்றால் ஏதேனுமொரு தவறிழைப்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தவறான முன்னுதாரணமாக அமையும். எனவே இவ்வாறு முன்வைக்கப்படும் தர்க்கங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த கைதுக்கு வெ வ்வேறு அர்த்தங்களை உருவாக்கும் அரசியல்வாதிகளின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன என்பது மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. எனவே இதனை அரசியல்மயப்படுத்த வேண்டாம்.
சுயாதீன விசாரணைக்கு இடமளிக்க வேண்டும்
இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறன்றி தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும், இனவாதத்தை முன்னிறுத்தி விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளானவை, தாக்குதல்களால் உயிரிழந்துள்ள மற்றும் வாழ் நாள் முழுவதும் அங்கவீனமுற்றுள்ளவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படும். எனவே இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விசாரணைகளின் நிறைவில் சாதகமான பிரதிபலனொன்று கிடைக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் இதனை தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால், அது எந்த கட்சியானாலும் பொறுத்தமான செயல் அல்ல. கடந்த தேர்தல்களின் போது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி நிலைநாட்டப்படும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் அன்று அவர்கள் வலியுறுத்திய விடயம் இன்று நிறைவேற்றப்படுகின்றது என்றால், அதற்கு உதவ வேண்டுமே தவிர, இடையூறு விளைவிக்கக் கூடாது. குறிப்பாக ஊடகங்களும் இந்த விடயத்தில் அரசியல் கோணத்தில் அல்லாமல் பக்கசார்பின்றி செய்திகளை வெளியிட வேண்டும். ஊடகங்கள் என்றும் மக்களுக்கானவையாக இருக்க வேண்டும்.
கடந்த 16 மாத கால விசாரணைகளில் 100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. வவுனதீவு சம்பவம், சாரா ஜெஸ்மின் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் பாதை என்ன என்பது எமக்கு தெளிவாகப் புரிகின்றது. அந்த பாதையின் இறுதி கட்டத்தை அண்மித்திருக்கின்றனர். அதன் காரணமாகவே தற்போது சிலர் பதற்றமடைந்துள்ளனர். விசாரணைகளின் இறுதி முடிவுகள் தம்மால் தாங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கக் கூடும் என்பதை உணர்ந்துள்ளமையால் தான் அவர்கள் இவ்வாறு பதற்றமடைந்துள்ளனர். விசாரணைகள் இதே போக்கில் சென்றால் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புகின்றோம்.
விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தாதீர்
முதன் முதலில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் காணப்படுகின்றது என்பதை முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வெளிப்படுத்தினார். அதன் பின்னரே பல்வேறு காரணிகள் வெளிப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது குறித்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சஹரான் உள்ளிட்ட குழுவினர் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்கள். அவர்களை அவ்வாறு செயற்பட செய்தவர்கள் இருக்கின்றனர். அது தொடர்பில் 23 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த குழுவை தமது தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்ட பிரிதொரு குழு தொடர்பிலும் பேசப்படுகிறது.
சஹரான் உள்ளிட்ட குழுவை வழிநடத்திய, தகவல்கள் தெரிந்திருந்தும் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத, அவற்றை மறைத்த மற்றும் விசாரணைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தி அவற்றை திசைதிருப்ப முயற்சித்ததன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது முக்கியத்துவமுடையது. அவர்கள் யார் என்பது இனங்காணப்பட்டால், அவர்களின் பின்னணியிலுள்ள அரசியல் தலையீடுகள் தொடர்பில் அறிய முடியும். அதற்கான விசாரணைகளே தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கொடூரமான மனிதப் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் இன்றும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகவும் பாரதூரமானது. அது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் மிக்கது. எனவே நாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.





