அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை நிராகரிப்பு
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 1,843,267,595.60 ரூபா (184 கோடிக்கும் அதிக) நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்து, பிரதிவாதஜ தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு 13-07-202 6அன்று ஒருமனதாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
கிரீஸ் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த 2012ஆம் ஆண்டில், அந்நாட்டுப் பிணைமுறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமைக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தரப்பினரால் இந்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையில், உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சி. ராகல ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை அறிவித்தது. முன்னதாக, தமக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த HCB 271/24 மற்றும் HCB 33/24 ஆகிய வழக்குகளில் உள்ள குற்றச்சாட்டுகளும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளும் சமமானவை என பிரதிவாதி தரப்பு மன்றில் தெரிவித்ததுடன், அந்த வழக்கு நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டனர்.
இதன்போது பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அதன் பணிப்பாளர் நாயகத்தினால் 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் நிர்வாகக் கட்டமைப்புக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு , இச்சட்டத்தின் மூலம் தற்போதுள்ள மூலச் சட்டத்தின்கீழ் எவ்வித உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது நடைமுறைச் சட்டமே என தெரிவித்திருந்தது. மேலும், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்படும் தீர்ப்பினால், பாதிக்கப்படும் தரப்பு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனடிப்படையில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளில் எவ்வித அடிப்படையும் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கின் முழுமையான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்தது.
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 1,843,267,595.60 ரூபா (184 கோடிக்கும் அதிக) நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முறைப்பாட்டாளர்கள் தரப்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) அனுஷா சம்பந்தப்பெரும மற்றும் கயா ராஜபக்ஷ ஆகியோரும், பிரதிவாதியான அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸுடன் ஒர்னெல்லா சில்வா மற்றும் முதித்த லொகுஹெட்டி ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.





