தித்வா புயல் தாக்கத்தால் வீடுகளை இழந்தோருக்கான கொடுப்பனவு - விசேட சுற்றறிக்கை வெளியீடு
இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், பொருத்தமானதொரு இடத்தில் புதிய வீடொன்றை அமைக்கும் வரை தற்காலிகமாகக் குடியேறுவதற்காக 06 மாத காலமே வழங்கப்பட்டிருந்தது.
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த நிலைமைகளால் வீடுகளை இழந்த மக்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த தற்காலிக வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கான விசேட சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் கையொப்பத்துடன் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், பொருத்தமானதொரு இடத்தில் புதிய வீடொன்றை அமைக்கும் வரை தற்காலிகமாகக் குடியேறுவதற்காக 06 மாத காலமே வழங்கப்பட்டிருந்தது. எனினும், 'அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் திட்டத்தின்' கீழ் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்திற்கு அமைய, அந்த நிவாரணம் வருமாறு அமல்படுத்தப்படுகிறது.
மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை இழந்து, வசிப்பதற்கு வீடற்ற நிலமையிலுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடொன்றை அமைக்கும் வரை தற்காலிகமாக வசிப்பதற்காக வழங்கப்படும் மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவு மாதாந்தம் 25000 ரூபாவாக வழங்கப்பட்டது.இந்த கொடுப்பனவு வழங்கல் மேலும் 03 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
05.12.2025 திகதியிடப்பட்ட ஆரம்ப வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களும் நிபந்தனைகளும் மாற்றமின்றி அப்படியே இருக்கும் எனவும் திறைசேரி செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





