வசதியான காலத்தில் ஜனாதிபதி அநுர பிரான்ஸ் செல்வார் - அமைச்சர் நளிந்த
இலங்கையின் உண்மையான நண்பரான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை பிரான்சிற்கு வருமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருப்பதை நாம் பாராட்டுகிறோம். இரு தரப்பிற்கும் வசதியான காலத்தில் அந்த விஜயம் நடைபெற்று, இருநாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அரசியல் உறவில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாக அமையும் என நம்புகிறோம் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன், பிரெஞ்சு அபிவிருத்தி முகாமை இலங்கையுடன் பேணிவரும் நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பையும், குறிப்பாக அண்மைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் பாரிஸ் கிளப் தலைவராக பிரான்ஸ் வழங்கிய உறுதியான ஆதரவையும் இலங்கை அரசாங்கம் மிகவும் உயர்வாக மதிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் தேசிய தினத்தை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் கொண்டாடியது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் ரெமி லெம்பெர்ட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டதுடன் பல நாடுகளின் இராஜதந்திரிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை பிரான்சிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதை நாம் பாராட்டுகிறோம். இரு தரப்பிற்கும் வசதியான காலத்தில் அந்த விஜயம் நடைபெற்று, இருநாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அரசியல் உறவில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாக அமையும் என நம்புகிறோம்.
பிரெஞ்சுக் குடியரசின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் இன்று மாலை உங்களுடன் இணைவதில் எனக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சார்பிலும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பிலும், எனது சார்பிலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்கும், பிரான்ஸ் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் எமது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நாம் பிரெஞ்சுக் குடியரசு நிலைநிறுத்தும் சுதந்திரம் (Liberty), சமத்துவம் (Equality), சகோதரத்துவம் (Fraternity) ஆகிய உயரிய விழுமியங்களையும் கொண்டாடுகிறோம்.
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் கடல்வழி வணிக வலையமைப்பின் ஊடாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று தொடர்புகள் 17ஆம் நூற்றாண்டை எட்டிச் செல்கின்றன.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முதன்முதலில் தூதரக உறவை ஏற்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். அதுவே இன்று நாம் அனுபவிக்கும் வலுவான, பல்துறை கூட்டுறவுக்கான அடித்தளமாக அமைந்தது.
அரசியல் உரையாடல், வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், கல்வி, சுற்றுலா மற்றும் மக்களுடுன் மக்களுக்கான தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் இந்த உறவுகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.
அண்மைக் காலங்களில் இலங்கை–பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. 2023ஆம் ஆண்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம், பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் முதன்முறையாக இலங்கைக்கு வந்த நிகழ்வாகும்.
2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற AI Impact Summit மாநாட்டின் போது பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் சந்தித்து கலந்துரையாடியதும் முக்கியமான தருணமாகும். மேலும், இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, 2025 மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை பிரான்சிற்கு விஜயம் செய்து, யுனெஸ்கோ ஏற்பாடு செய்த நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றதும் இருதரப்பு உறவை வலுப்படுத்தியது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை பிரான்சிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதை நாம் பாராட்டுகிறோம். இரு தரப்பிற்கும் வசதியான காலத்தில் அந்த விஜயம் நடைபெற்று, இருநாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அரசியல் உறவில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாக அமையும் என நம்புகிறோம்.
அண்மைய ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2026 ஜூனில் இரு வெளிவிவகார அமைச்சுகளுக்கிடையேயான இரண்டாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2024ஆம் ஆண்டு இலங்கையில் பிராந்திய கடல்சார் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. மேலும், பிரெஞ்சு அபிவிருத்தி முகாமை (AFD) தனது தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை கொழும்பில் நிறுவியுள்ளது.
2026 ஏப்ரலில் பிரெஞ்சு செனட் நட்புறவுக் குழுவின் தலைவர் வன்னினா பாவ்லி-கார்ஜி தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட பிரெஞ்சு பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயத்தையும் நாங்கள் அன்புடன் நினைவுகூர்கிறோம். அந்த விஜயம் இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை வலுப்படுத்தவும், புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவும் உதவியது.
1970ஆம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி ஒத்துழைப்பில் பிரான்ஸ் வழங்கிவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை இலங்கை மிகுந்த மதிப்புடன் பாராட்டுகிறது. தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பிரான்ஸ் வழங்கிய நிதியுதவி இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
பிரெஞ்சு அபிவிருத்தி முகாமை இலங்கையுடன் பேணிவரும் நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பையும், குறிப்பாக அண்மைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் பாரிஸ் கிளப் தலைவராக பிரான்ஸ் வழங்கிய உறுதியான ஆதரவையும் இலங்கை அரசாங்கம் மிகவும் உயர்வாக மதிக்கிறது.
இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது முக்கிய நோக்கமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கையின் முக்கிய பங்காளியாக பிரான்ஸ் தொடர்ந்து இருந்து வருகிறது. EU GSP Plus வரிச்சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதிகளுக்கு சுங்கவரி இல்லா சலுகை வழங்கப்படுவதற்கும் பிரான்ஸ் ஆதரவளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு வர்த்தகம் 350 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அளவில் நிலைத்துள்ளது. முதலீட்டிலும் பிரான்ஸ் இலங்கையின் முக்கிய பங்காளியாக உள்ளது. 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்கிய முதல் ஐந்து நாடுகளில் பிரான்சும் ஒன்றாக இருந்தது. குறிப்பாக உற்பத்தி, சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் துறைகளில் அதன் முதலீடுகள் குறிப்பிடத்தக்கவை. சுற்றுலாத்துறையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பிரான்ஸ் ஏழாவது பெரிய சந்தையாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலால் இணைக்கப்பட்டுள்ள கடல்சார் நாடுகளாகிய இலங்கையும் பிரான்சும் கடல்சார் பாதுகாப்பு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெருங்கடல் நிர்வாகம் ஆகிய துறைகளில் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு, சட்டவிரோத மற்றும் ஒழுங்கற்ற மீன்பிடியை (IUU Fishing) தடுப்பது, பேரிடர் அபாய முகாமைத்துவம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் (Blue Economy) போன்ற துறைகளில் பிரான்சுடன் இணைந்து செயல்பட இலங்கை ஆவலுடன் எதிர்நோக்குகிறது.
தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கடல் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்திருப்பதையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறேன். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்காக பிரான்ஸ் வழங்கிய தலைமைத்துவத்தை நாம் பாராட்டுகிறோம்.
மக்களுடன் மக்களுக்கான உறவுகள் இலங்கை–பிரான்ஸ் உறவின் அடிப்படையாக உள்ளது. பிரான்சில் வாழும் இலங்கை சமூகத்தினர் இரு நாடுகளுக்கும் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குவதுடன், இரு மக்களுக்கிடையேயான நட்பின் பாலமாகவும் திகழ்கின்றனர்.
பல தசாப்தங்களாக Alliance Française நிறுவனம் பிரெஞ்சு மொழி மற்றும் கலாசாரத்தை இலங்கையில் பரப்பி, இருநாடுகளுக்கிடையேயான உறவுக்கு தனித்துவமான நெருக்கத்தையும் உயிரோட்டத்தையும் வழங்கி வருகிறது.
டித்வா புயலைத் தொடர்ந்து பிரான்ஸ் வழங்கிய துரிதமான உதவிகளுக்கும், இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகள், அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய அலுவலகம் ஊடாக வழங்கப்பட்ட நிதியுதவிக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும், முக்கிய உட்கட்டமைப்புகளை மீளமைப்பதிலும் பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என நம்புகிறோம்.
இலங்கையின் உண்மையான நண்பரான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது அயராத சேவையும், தங்களது திறமையான குழுவின் அர்ப்பணிப்பும் இலங்கை – பிரான்ஸ் உறவை மேலும் வலுப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளது. உங்கள் எதிர்கால பணிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரெஞ்சு தேசிய தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இரு நாடுகளுக்கிடையேயான நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். எமது இரு மக்களின் பரஸ்பர நலனுக்காக இந்த கூட்டுறவின் முழு திறனையும் ஒன்றிணைந்து நனவாக்குவோம் என மேலும் தெரிவித்தார்.





