அட்டாமாஸ்தானாதிபதி பதவியிலிருந்து ஹேமரத்தன தேரர் இடைநிறுத்தம்
சம்பந்தப்பட்ட தரப்பினரை நேரில் அழைத்து, சங்க சபையினால் இந்த விவகாரம் தொடர்பான உண்மைத்தன்மை குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அநுராதபுர புனித அட்டமஸ்தானத்தின் பல்லேகம ஹேமரத்தன தேரர் அப்பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக மல்வத்து பீடம் அறிவித்துள்ளது.
அத்துடன் அட்டமஸ்தானத்தின் நிர்வாகப்பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில், வடமத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கரும், ருவன்வெலி மகாசாயாவின் விகாராதிபதியுமான ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக நாயக்க தேரரை தற்காலிகமாக நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் மல்வத்து பீடம் அறிவித்துள்ளது.
மல்வத்து மகாநாயக்க தேரரின் பணிப்புரையின் பிரகாரம், மல்வத்துபீடத்தன் சங்க சபையினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடிதம் மல்வத்து மகா விகாரையின் செயலாளர் கலாநிதி பாமுணே சுமங்கல தேரால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மகா விகார வம்சிக சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரைப் பிரிவின் நுவரகலாவிய பிரதான சங்கநாயக்க பதவியையும், அட்டமஸ்தானாதிபதி பதவியையும் வகிக்கும் அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மல்வத்து பீடத்தின் சங்க சபையினால் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, சம்பந்தப்பட்ட தரப்பினரை நேரில் அழைத்து, சங்க சபையினால் இந்த விவகாரம் தொடர்பான உண்மைத்தன்மை குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, 2026.05.30 ஆம் திகதி கூடிய மல்வத்து பீட சங்க சபையின் தீர்மானத்தின் பிரகாரம், அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து, அது தொடர்பான இறுதித் தீர்ப்பு வரும் வரை, சங்க சபைக்கு உரித்தான அதிகாரங்களின் அடிப்படையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த நுவரகலாவிய பிரதான சங்கநாயக்க பதவியை இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சங்க சபையின் நிருவாகப் பணிப்புரைக்கமைய, அட்டமஸ்தான குழுவின் உறுப்பினரான வடமத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கர் மற்றும் ருவன்வெலி மகாசாயவின் விகாராதிபதி ஈதலவெட்டுணுவேவே ஞானதிலக நாயக்க தேரரை, அட்டமஸ்தானாதிபதி பதவியின் கடமைகளை தற்காலிகமாக நிறைவேற்றுவதற்காக நியமிக்க தீர்மானித்துள்ளது. நீதித்துறையின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்தத் தற்காலிக ஏற்பாடு அமுலில் இருக்கும்.
இந்த தீர்மானமானது, மல்வத்து பீட மாநாயக்க தேரரின் பணிப்புரைக்கமைய அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





