இக்கட்டான நேரத்தில் மக்களை கைவிடக்கூடாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையேற்றம், உர தட்டுப்பாடு, கறுப்புச் சந்தை வணிகம் மற்றும் வறட்சி போன்ற பிரச்சினைகளால் கடன்பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இன்று எந்தவொரு இலாபமும் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு நச்சுச் சுழற்சிக்குள் சிக்கியுள்ளனர்.
கடந்த கால வரலாற்றில் வாழ்ந்த ஆட்சியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும் மக்களைக் கைவிடாதது போல, தற்போதைய கடினமான காலகட்டத்திலும் நாம் மக்களைக் கைவிடக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் 30-05-2026 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்று யார் என்ன கூறினாலும் நாட்டின் விவசாயிகள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். தேர்தல் காலத்தில் நெல்லுக்கு 150 ரூபா நிலையான விலையை வழங்குவதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையேற்றம், உர தட்டுப்பாடு, கறுப்புச் சந்தை வணிகம் மற்றும் வறட்சி போன்ற பிரச்சினைகளால் கடன்பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இன்று எந்தவொரு இலாபமும் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு நச்சுச் சுழற்சிக்குள் சிக்கியுள்ளனர்.
அன்று விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்தவர்கள் இன்று விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், நவீன தொழில்நுட்ப முறைமைகளைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்ற முடியும். எனவே, அன்றைய அரச காலத்தைப் போல தற்போதும் நாம் விவசாயிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.





