கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - ஓஸ்மனின் மகன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சசி மஹேந்திரன் மற்றும் ஆதித்ய பாலபட்டபெந்தி ஆகியோரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்க எடுத்தக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதாள உலகக்குழு தலைவர் என அறியப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றைபிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான ஷெஹான் குணசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தானை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டி உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்த விடுக்க உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சசி மஹேந்திரன் மற்றும் ஆதித்ய பாலபட்டபெந்தி ஆகியோரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்க எடுத்தக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கம்பஹா, இம்புல்கொட பகுதியை சேர்ந்த ஷெஹான் குணசேகர, சட்டத்தரணி அமில குமார ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த எழுத்தானை மனுவில், நான் ஒரு தொழிலதிபர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவம் தொடர்பில் எனது தந்தை கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி எனது தந்தையின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் இரு துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். அத்துப்பாக்கிகளுக்கு சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்கள் உள்ள போதிலும், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக ஊடகங்கள் வாயிலாக தவறான செய்தி வெளியாகியிருந்தது. இதற்கிடையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வருகை தந்து வாக்குமூலம் அளிக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய , நான் பல சந்தர்ப்பங்களில் அங்கு சென்று வாக்குமூலங்களை வழங்கியிருந்தேன்.
அவ்வாறு வாக்குமூலம் வழங்கியபோது, தாய்லாந்தில் இருந்த 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் தொடர்புகளை வைத்திருந்தேனா? என வினவி, என்னை அச்சுறுத்தும் தொனியில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில், பொலிஸாரால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கைது செய்யப்படுவதற்கான சாத்தியபாடுகள் காணப்படுவதால், அவ்வாறு கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.





