சிறைச்சாலை நெரிசலை குறைப்பதற்கான ஒரு மாற்று நடவடிக்கை - அலி சப்ரி
ஒரு சந்தேக நபருக்கு பிணை தேவைப்பட்டால், அந்தப் பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு மாற்று நடவடிக்கையாக, 54 ஆவது பிரிவின் கீழ் 2022 ஆம் ஆண்டின் நச்சுப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் . இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது, தான் நீதி அமைச்சர் பதவியை வகிக்கவில்லை என முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் மோதல் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது: அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்படும் வரை, தற்போதுள்ள உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேரம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும்.
தான் நீதி அமைச்சராக இருந்த காலத்தில், இரண்டு வேலை முறைகளாக பிரித்து, உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேரம் உள்ளிட்ட இதர வசதிகளை வழங்கி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். 2020 ஆம் ஆண்டில் தான் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கும்போது சுமார் 29000 கைதிகள் காணப்பட்டனர். 2021 ஜனவரிக்குள் அந்த எண்ணிக்கையை 18000 ஆகக் குறைவடைந்தது.
தற்போது போதைப்பொருள் 2 கிராமுக்கு குறைவாக இருந்தால் நீதிவான் நீதிமன்றத்தின் மூலம் பிணை வழங்க முடியும் .அந்த அளவை 5 கிராம் வரை அதிகரிக்க வேண்டும் ஃஇது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போதே தனது அமைச்சுப் பதவி மாறியது.
மேற்கொள்ளவிருந்த திருத்தங்களின்படி, 5 கிராமுக்கு குறைவாக இருந்தால் நீதிவான் நீதிமன்றத்திலிருந்தும், 5 கிராம் முதல் 10 கிராம் வரை இருந்தால் மேல் நீதிமன்றத்திலிருந்தும், 100 கிராமுக்கு அதிகமாக இருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்தும் பிணை பெறக்கூடிய வகையில் சட்டத்தைத் திருத்த திட்டமிட்டிருந்தது.
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்.
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம், 2022 இல் நச்சுப் பொருட்கள்,அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளுமே ஆகும்.
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 வெற்றிடங்கள் காணப்பட்டன. 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவை நிரப்பப்படவில்லை. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதற்கான நியமனங்களை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2022 திருத்தத்திற்குப் பிறகு,2 கிராமுக்கு அதிகமான போதைப்பொருள் வழக்குகளுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை வழங்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால்,புதிய திருத்தத்தின் பின்னர் அது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வர வேண்டியுள்ளது. வழக்கு எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூற முடியாது.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வரும் வரை போதைப்பொருளின் தூய எடையைக் கண்டறிய முடியாது. அதைக் கண்டறிய ஒரு வருடம் வரை ஆகிறது. சட்ட நடவடிக்கைகளுக்கு மேலும் 6 மாதங்கள் ஆகின்றன. அப்போது ஒரு வருடமும் 6 மாதங்களும் கடந்துவிடுகின்றன. நாங்கள் வந்தவுடன் இந்தத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தூய எடைக்கு அல்லாமல், மொத்த எடைக்கு ஏற்ப நீதிமன்றத்தைத் தெரிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காக, தற்போதுள்ள இடங்களில் இடவசதி போதாமையினால், அவற்றை அதிகரிப்பதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
2022 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட,1924 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நச்சுப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தின் 54 ஆவது பிரிவின் கீழ் ஹெரோயின், கொகைன், மோர்பின், கஞ்சா, அபின் மற்றும் 'ஐஸ்' போன்ற அடிமையாக்கும் போதைப்பொருட்களை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.இந்தப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு இல்லை.
ஒரு சந்தேக நபருக்கு பிணை தேவைப்பட்டால், அந்தப் பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் 54 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும்போது இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட வேண்டும். அந்த அறிக்கையைப் பெறுவதற்கு சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம் என்பதால் அதுவரை அந்த சந்தேக நபர் விளக்கமறியலில் இருக்க வேண்டியுள்ளது.
அந்தப் பிரிவின் கீழ், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின்படி போதைப்பொருளின் தூய எடை 10 கிராம் அல்லது அதற்கு அதிகமாகும் போது, பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லாமல் போகிறது. அவ்வதிகாரம் அப்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே கிடைக்கிறது. இரசாயன பகுப்பாய்வு அறிக்கை 10 கிராமுக்கு குறைவாக இருந்தால் மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும்.
இந்தப் பிரிவில் உள்ள சட்ட அதிகாரத்தின் காரணமாக, சிலர் பொலிஸ் நிலையங்களில் கைது செய்யப்பட்ட பின்னர், சில சமயங்களில் அவர்களுக்கு நடக்கும் முறையற்ற பொலிஸ் நடவடிக்கைகள் காரணமாக சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது கேட்க முடிகிறது. இது சிறைச்சாலை நெரிசலுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதோடு, இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்கள் சிறைகளில் வாடும் நிலமைகள் குறித்தும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.





