தங்கப்பிணை மற்றும் மோட்டார் வாகன கடன் வசதிகளுக்கான உச்ச வரம்பு இறுக்கம்
இந்த இறுக்கமான வரம்புகள், மேற்குறிப்பிட்ட விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட கடன்வழங்குனர்களின் கடன் வழங்கல் அளவு மற்றும் வருவாய் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கையில் மோட்டார் வாகனக்கடன் மற்றும் தங்கப்பிணை என்பவற்றுக்கான கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டிருப்பது கடன்வழங்குனர்களின், குறிப்பாக நிதி நிறுவனங்களின் இடர் அச்சுறுத்தலைக் குறைக்குமென ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் மோட்டார் வாகனக்கடன் மற்றும் தங்கப்பிணை என்பவற்றுக்கான கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டிருப்பது கடன்வழங்குனர்களின், குறிப்பாக நிதி நிறுவனங்களின் இடர் அச்சுறுத்தலைக் குறைக்கும். அண்மையகாலங்களில் மிகவேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்த மற்றும் நிதி நிறுவனங்களின் இருப்பில் கணிசமான பங்கைக் கொண்டிருக்கும் இந்த இரு விடயங்களையும் அடிப்படையாகக்கொண்டு மத்திய வங்கி கடன் உச்ச வரம்பை நிர்ணயித்திருக்கிறது.
இந்த இறுக்கமான வரம்புகள், மேற்குறிப்பிட்ட விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட கடன்வழங்குனர்களின் கடன் வழங்கல் அளவு மற்றும் வருவாய் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேவேளை தங்கம் சார்ந்த கடன்களில் ஏற்படக்கூடிய இடர்நேர்வைத் தணிப்பதற்கு இந்த இறுக்கமான வரம்பு பங்களிப்புச்செய்யும் என நாம் எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





