தித்வாவினால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு நிதியுதவி
இலங்கை அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதியுதவி வழங்கல் செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவி வழங்கலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
'தித்வா' சூறாவளியின் மிகமோசமான பாதிப்புக்களிலிருந்து இலங்கை தொடர்ந்து மீண்டுவரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட 4000 குடும்பங்களுக்கான நிதியுதவி சர்வதேச புலம்பெயர்வு அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்பான அவசரகாலப் பதிலிறுப்பு நிதியம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் என்பவற்றின் ஆதரவுடனும், இலங்கை அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதியுதவி வழங்கல் செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவி வழங்கலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
புத்தளம், பதுளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 4000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும், அத்தியாவசிய வீட்டு உபயோகப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட பயனாளர்கள், சூறாவளியினால் வீடுகள் சேதமடைந்தவர்கள் என்ற அளவுகோலின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.





