தேசிய அடையாளத்தின் இதயமே பௌத்த மதம்: அமைச்சர் விஜித்த ஹேரத்
பௌத்தம் என்பது நோய் மற்றும் மரணம் போன்ற இயற்கையின் எல்லைகளிலிருந்தும், மனிதனால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புக்களினால் ஏற்படும் முடிவற்ற துன்பச் சுழற்சியிலிருந்தும் தீர்வுகளைத் தேடும் ஒரு பயணமாகும்.
இலங்கை எப்போதும் பௌத்த மதத்தை தனது தேசிய அடையாளத்தினதும், கலாசாரத்தினதும் இதயமாகக் கருதுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூகப் பேரவையில் நடைபெற்ற 27 ஆவது சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்ட நிகழ்வில் காணொளி வடிவில் வெளியிடப்பட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் வெசாக் தினச்செய்தியில் மேலும் கூறப்பட்டதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திலும் அதன் ஏனைய கிளைக்கட்டமைப்புக்களின் அலுவலகங்களிலும் வெசாக் தினத்தை சர்வதேச ரீதியாக அங்கீகரிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க 54/115 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 27 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தமை குறித்துப் பெருமிதமடைகிறேன்.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரின் முயற்சியினாலும், தீர்க்கதரிசனத்தினாலும் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலம் உலகம் முழுவதிலும் வாழும் பல மில்லியன் பௌத்தர்களின் புனித நாளான வெசாக் தினத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் வருடாந்தம் நடைபெறும் இந்த வெசாக் தினக்கொண்டாட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கும், அதில் பங்கேற்பதற்குமான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அத்தோடு இந்த நிகழ்வின் இணை ஏற்பாட்டாளரான தாய்லாந்து அரசுக்கு என விசேட நன்றியை வெளிப்படுத்துகிறேன்.
வெசாக் தினமானது புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணம் அடைதல் ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது. மனித மனத்தின் உண்மையான ஆற்றலை உலகுக்கு வெளிப்படுத்திய புத்த பெருமான், உள்மன மற்றும் வெளி உலக அமைதியை அடைந்துகொள்வதற்காக எண்வகை வழிகளையும், பரிநிர்வாணம் எனும் இறுதி அடைவையும் காண்பித்துள்ளார்.
பௌத்தம் என்பது நோய் மற்றும் மரணம் போன்ற இயற்கையின் எல்லைகளிலிருந்தும், மனிதனால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புக்களினால் ஏற்படும் முடிவற்ற துன்பச் சுழற்சியிலிருந்தும் தீர்வுகளைத் தேடும் ஒரு பயணமாகும்.
அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது பகுத்தறிவு மாத்திரமே என்றும், நாமாகவே உள்வாங்கிக் கட்டியெழுப்பிய கருத்தியல்களின் அடிப்படையிலேயே நாம் யார் என்பது தீர்மானிக்கப்படுகிறது என்றும் புத்த பெருமான் விளக்கியுள்ளார். இந்தக் கருத்தியல்கள் நமக்குள் பிரிவினை உணர்வை ஏற்படுத்துகின்றன.
அவை சமூகக் கட்டமைப்புக்களுக்குள் ஆழமாக வேரூன்றி, அரசு, தேசம், சாதி, பாலினம், நிறம் மற்றும் மதம் போன்ற பிரிவினைகளின் ஊடாக மனித வரலாற்றின் பெரும்பாலான துன்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவினைகள் மீதான தீவிர பற்றுதலே துன்பத்துக்கு அடிப்படைக் காரணம் என்பதுடன், இதன்மூலம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்படும் சூழ்நிலைகள் உருவாகின்றன.
பௌத்த மதம் உலகம் முழுவதும் பரவியபோது பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றி நிர்வாணப்பாதையைத் தேடினர். அதுமாத்திரமன்றி அந்தச் சமூகங்கள் தமது வாழக்கையை பௌத்த போதனைகளை அடிப்படையாகக்கொண்டு வடிவமைத்துக்கொண்டன. இலங்கை எப்போதும் பௌத்த மதத்தை தனது தேசிய அடையாளத்தினதும், கலாசாரத்தினதும் இதயமாகக் கருதுகிறது. அந்தவகையில் எமது அரசாங்கம் பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் சமூகநலன் ஆகியவற்றை சமநிலைப்படுத்தி, நிலையான பார்வையுடன் 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
நெருக்கடிகளுக்கு மத்தியில் இணக்கப்பாட்டுக்கு வருவது அல்லது நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்வது பலவீனம் அல்ல. மாறாக அது பலமாகவே கருதப்படவேண்டும். உலக அமைதி மற்றும் சகவாழ்வுக்காக பௌத்தம் போதித்த மெத்தா, கருணா, முதிதா மற்றும் உபேக்கா ஆகிய நான்கு பண்புகளை முன்னிறுத்தி செயற்படுவதற்கு வழிகாட்டவேண்டும் என்றார்.





