நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள் நீடிப்பதற்கு திட்டம் -அஜித் பி பெரேரா
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள் நீடிப்பதற்கான முன்மொழிவை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவோ அல்லது எந்தவொரு பாராளுமன்றக்குழுவிலோ விவாதிக்கப்படவோ இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிறுவனமோ அல்லது பங்குதாரர்களோ இவ்வாறானதொரு திருத்தத்திற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை விடுக்காத நிலையில், அரசாங்கத்தால் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை. இது குறித்து எந்தவொரு பாராளுமன்றக் குழுவிலும் விவாதிக்கப்படவுமில்லை.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்குமாறு பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அல்லது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய இரண்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இவ்வாறானதொரு திருத்தம் ஏன் கொண்டு வரப்படுகிறது என்பதை பாராளுமன்றத்திற்கு யாரும் விளக்கவில்லை, எந்தவொரு பாராளுமன்றக் குழுவிலும் இது விவாதிக்கப்படவுமில்லை.
இந்த முன்மொழிவுக்குப் பின்னால் மறைமுக அரசியல் நோக்கம் காணப்படுகிறது. இந்த முன்மொழிவை யார் முன்வைக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. அதாவது இதற்குப் பின்னால் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் உள்ளது. தனியார் முறையில் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட ஒரு வரைபு எங்களுக்கு கிடைத்துள்ளது. அரசாங்கம் இதை எப்படியாவது நிறைவேற்ற உறுதியாக உள்ளது.
அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சமநிலையை மாற்றுவதே இதன் நோக்கமாகும். அரசாங்கத்தின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப நீதித்துறையின் சமநிலையை மாற்றயமைப்பதற்காகவே இது செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது உறுதியாக அறிவோம். டிசம்பர் முதல் வாரத்தில் இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த முழு செயல்முறையும் மிகவும் இரகசியமானதாகத் தோன்றுகிறது என்றார்.





