உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் பிரமுகர் பாதுகாப்பு - அமைச்சர் நளிந்த
அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட அத்தகைய விசேட பிரமுகர் பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதைச் சாதாரண பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே வழங்கப்படுகிறதே தவிர, தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 14-07-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விசேட பாதுகாப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தின் விபரங்களுக்கமைய, அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மதும பண்டார, எச்.எம். தர்மசேன மற்றும் விசேடமாக கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என விசேட பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட அத்தகைய விசேட பிரமுகர் பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதைச் சாதாரண பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும், அதேபோன்று தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத சில முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட '2398/26' இலக்க பொலிஸ் சுற்றறிக்கையின் விதிகளுக்கு அமைவாகவே தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, ஏதேனும் ஒரு நபர் தனக்கு பொலிஸ் பாதுகாப்புத் தேவை எனக் கோரி விண்ணப்பித்தால், அது குறித்து அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை' கோரப்படும். அதன் பின்னர், குறித்த நபருக்கு உள்ள அச்சுறுத்தல் நிலைவரம் ஆராயப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான விசேட குழுவொன்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாத போதிலும், அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, அரச உளவுச் சேவை வழங்கிய அச்சுறுத்தல் விபரங்களை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கு இந்த பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.





