கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கப் பணி - 'மகா என்ஜினியரிங்' நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பயணிகள் தங்கியிருக்கும் முனையத்தை விரிவுபடுத்துவதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை மகா என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலைய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 36 புதிய சோதனைச் சாவடிகள் மற்றும் பயணிகள் முனையத்திலிருந்து விமானம் வரை செல்வதற்கான 6 புதிய வாயில்களைக் கொண்ட கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக சர்வதேச போட்டி பெறுகை முறையில் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்காக கிடைத்த மூன்று விலைமனுக்களைப் பரிசீலித்த உயர்மட்டப் பெறுகைக்குழு, தகைமைகளைப் பூர்த்தி செய்து மிகக் குறைந்த விலை மனுவை சமர்ப்பித்த மகா என்ஜினியரிங் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கப் பரிந்துரைத்துள்ளது.
இதற்கமைய, 7.26 மில்லியன் டொலர் மற்றும் 3.77 பில்லியன் இலங்கை ரூபா (பெறுமதி சேர் வரி நீங்கலாக) ஆகிய தொகைகளின் கீழ் இந்த விரிவாக்க வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.





