சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமாரவிடம் எழுத்துமூல கோரிக்கை
அவரது வழக்கு தொடர்பான வாசிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் அவர் மறுக்கப்பட்டுள்ளார். மேலும் குறிப்புகள் எடுப்பதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவரான சுரேஷ் சலே சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாலை வேளையில் அதிகாரிகள் குழுவினர் அவரது அறைக்குள் நுழைந்து, பிற அதிகாரிகள் மற்றும் கைதிகளின் முன்னிலையில் அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி,விலங்கிட்டு, மனிதாபிமானமற்ற மற்றும் அநாகரீகமான நடத்தைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.இது முற்றிலும் கடும் மனித உரிமை மீறலாகும். எனது கணவரின் உடல் மற்றும் உளவியல் நிலை வேகமாக மோசமடைந்து வருவது தெளிவாகிறது. அவரது உயிருக்கு இப்போது கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அதற்கு அவரது தடுப்புக்காவலை நேரடியாக மேற்பார்வையிடும் சி.ஐ.டி நிர்வாகம், குறிப்பாக தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவே பொறுப்பேற்க வேண்டும் என தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார்.
சுரேஷ் சலேவை தடுப்புக்காவலில் இருந்து விடுவிப்பதற்கு உடனடியாகத் தலையிடுமாறு அல்லது குறைந்தபட்சம் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அவரை விளக்கமறியல் காவலுக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்.சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான மற்றும் நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.சட்டத்திற்கு இணங்க அவரது அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் உடல் நிலைமையை சுட்டிக்காட்டி அவரது மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் முழு வடிவம் வருமாறு
பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் தங்களால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேவின் மனைவி என்ற ரீதியில், ஆழ்ந்த கவலையுடனும் அவசரத்தன்மையுடனும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எனது கணவர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசியல் அரசாங்கங்களின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத விசுவாசத்துடனும் தொழில்சார் ஒழுக்கத்துடனும் இந்த நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். அவரது புகழ்பெற்ற சேவைக்காலம் முழுவதும், அவர் மீது எந்தவொரு முறையற்ற அல்லது தவறான நடத்தை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டதில்லை. இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் பேண அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்ததையே அவரது சேவைப் பதிவுகள் பிரதிபலிக்கின்றன.
அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்றும், அத்தகைய தகவல்களை வேண்டுமென்றே வெளிப்படுத்தத் தவறியதன் மூலம் அந்த கொடூரமான குற்றங்களைச் செய்வதற்குக் சதி செய்தார், உதவினார் மற்றும் தூண்டினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலுக்குப் பின்னர் குற்றவாளிகளின் அடையாளங்களை அவர் தெரிந்தே மறைத்தார் என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்றைய நிலவரப்படி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை ஒரு நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் வழக்கு ஆவணங்களில் இல்லை. நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில், இந்த தடுப்புக்காவல் உத்தரவு ஆரம்பத்திலிருந்தே சட்டவிரோதமான அடிப்படையிலேயே அநீதியானதாகவும் தோன்றுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர, கத்தோலிக்க திருச்சபையின் சிலரும் இணைந்து எனது கணவருக்கு எதிராக ஒரு தனிப்பட்ட பழிவாங்கலைத் தொடர்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர, இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருக்கும் தனது ஒருகால சிறைத்தோழரான சி.ஐ.டியின் உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸைப் பயன்படுத்தி, எனது கணவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சியங்களை உருவாக்குவதற்காக ஒரு தலைப்பட்சமான விசாரணையை நடத்தி வருகிறார் என்பதும் தெளிவாகிறது.
எனது கணவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அவர் நடத்தப்பட்ட விதம் மேலும் கவலையளிக்கிறது. தற்போது கிட்டத்தட்ட 80 நாட்களாக நீடித்துவரும் இந்த தடுப்புக்காவல் காலத்தில், அவர் மிகக் குறைந்த சந்தர்ப்பங்களிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது இத்தகைய அவமதிப்பான, மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சூழ்நிலைகளின் கீழ் அவரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதன் அவசியம் மற்றும் நோக்கம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. கடந்த ஒரு மாத காலத்தில், அவர் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே, அதுவும் மிகக் குறுகிய காலத்திற்கே விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்று எனக்குத் தெரியவந்துள்ளது. தற்போதைய பணிப்பாளர் எனது கணவரைத் துன்புறுத்துவதற்கும், அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளுக்கு அவரை ஆளாக்குவதற்கும் மட்டுமே உத்தேசித்துள்ளார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கைகளில் அவர் கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் அவமதிப்பான நடத்தைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அவர் தோராயமாக 6.5 அடிக்கு 4.4 அடி அளவுள்ள ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டுள்ளார். காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அவர் கழிவறை வசதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார். சட்டத்தரணிகள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் சந்திப்புகளுக்கு அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது மட்டுமே அவர் தனது சிறை அறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்.
அவர் எலிகள் நிறைந்த ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு எலி கடித்ததற்காக ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்துள்ளது. எலி கடித்துவிடுமோ என்ற அச்சத்தினால் எனது கணவரால் இரவில் தூங்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழியிலான தூக்கமின்மை என்பது உடல் மற்றும் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு சமமானதாகும். அவரது வழக்கு தொடர்பான வாசிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் அவர் மறுக்கப்பட்டுள்ளார். மேலும் குறிப்புகள் எடுப்பதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மனவேதனைக்குரிய விடயம் என்னவென்றால், அவர் தடுத்து வைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒரு மாலை வேளையில் அதிகாரிகள் குழுவினர் அவரது அறைக்குள் நுழைந்து, பிற அதிகாரிகள் மற்றும் கைதிகளின் முன்னிலையில் அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி, விலங்கிட்டு,மனிதாபிமானமற்ற மற்றும் அநாகரீகமான நடத்தைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தச் செயல்கள் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை சட்டத்தின் கீழ் கடுமையான மீறல்களாகும். இது தொடர்பாக 2026 மார்ச் 7 ஆம் திகதி பொலிஸ் மா அதிபரிடம் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது. மேலும், சி.ஐ.டி க்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவிடம் சி.சி.டி.வி காட்சிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏனெனில் அந்த சி.சி.டி.வி காட்சிகள் இந்தத் தவறிழைப்புக்கான சுயாதீனமான ஆதாரமாக அமையும். எனினும், பொலிஸ் மா அதிபரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்பதும் ஆழமான வருத்தத்திற்குரியது.
பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு மற்றும் சி.ஐ.டி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஆகியவற்றின் பிரதிகள் உங்களின் (ஜனாதிபதி) பரிசீலனைக்காக முறையே இணைத்துள்ளேன்.
இந்த விவகாரங்கள் 2026 மார்ச் 11 ஆம் திகதியும், மீண்டும் 2026 ஏப்ரல் 22 ஆம் திகதியும் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி நீதவான் எனது கணவரை உடனடியாக ஒரு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் ஒரு சட்ட மருத்துவ மனநல மருத்துவரிடம் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார். நீதவானிடமிருந்து அந்த உத்தரவைப் பெற்ற பின்னரும், சிஐடியினர் எனது கணவரை 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தத் தவறியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சட்ட மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கோ அல்லது குறைப்பதற்கோ செல்வாக்கு செலுத்தும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து எனது கணவர், கடந்த 2026 மார்ச் 7 ஆம் திகதி எனது மகனும் எனது கணவரின் சகோதரரும் அவரைப் பார்வையிடச் சென்றபோது எனது மகனிடம் முதலில் தெரிவித்தார். எனினும், அன்றைய தினம் சி.ஐ.டி அதிகாரிகளால் அனைத்து உரையாடல்களும் கண்காணிக்கப்பட்டதால், தனது உயிருக்கு இருந்த பயம் காரணமாக, தான் எவ்வாறு இந்த மனிதாபிமானமற்ற, அவமதிப்பான மற்றும் சித்திரவதையான நடத்தைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற துல்லியமான விபரங்களை எனது கணவரால் வெளிப்படுத்த முடியவில்லை. எனவே, மார்ச் 7 ஆம் திகதி பொலிஸ் மா அதிபரிடம் நாங்கள் முறைப்பாடு செய்தபோது, எனது கணவரிடமிருந்து விரிவான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரம் சி.ஐ.டி பணிப்பாளரின் அதிகார வரம்பிற்குள் வராத ஒரு சுயாதீன புலனாய்வுப் பிரிவினால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் குறிப்பாகக் கோரியிருந்தோம்.
தனது சட்டத்தரணிகளுடன் 2026 மார்ச் 26 ஆம் திகதி வரை நடந்த அனைத்துத் தொடர்புகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டதால், அதற்குப் பின்னரே இந்த விபரங்களை எனது கணவரால் தனது சட்டத்தரணிகளுக்கு முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது. 2026 மார்ச் 26 ஆம் திகதி, கோட்டை நீதவான், சட்டத்தரணி இடையிலான தொடர்புகள் சிறப்புரிமை பெற்றவை என்பதை அங்கீகரித்து, எவ்வித தலையீடும் இன்றி சட்டத்தரணிகளுடனான ஆலோசனைகளை எளிதாக்குமாறு சி.ஐ.டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த சூழ்நிலைகளின் விளைவாக எனது கணவரின் உடல் மற்றும் உளவியல் நிலை வேகமாக மோசமடைந்து வருவது தெளிவாகிறது. அவரது உயிருக்கு இப்போது கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அதற்கு அவரது தடுப்புக்காவலை நேரடியாக மேற்பார்வையிடும் சி.ஐ.டி நிர்வாகம், குறிப்பாக தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்விடயத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவே எனது கணவரின் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் காவலுக்கு நேரடியாகப் பொறுப்பானவர் என்பதை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சதி, உதவி மற்றும் தூண்டுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எனது கணவர் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கும் இதே பணிப்பாளரே பொறுப்பாக உள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு வழிவகுத்த சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, ஒரு சுயாதீன ஜனாதிபதி விசாரணைத் குழுவினால் தண்டனைச் சட்டக் கோவையின் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு நபரே இப்பணிப்பாளர் என்பது கடுமையான முரண்பாட்டை தோற்றுவிப்பதோடு, மிகுந்த கவலையையும் அளிக்கிறது.
அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தொடர்பாக கடமை தவறியமை குறித்த விசாரணைகளுக்கும் உட்பட்டுள்ளார் என்றும், தற்போது அவரது கட்டளையின் கீழ் உள்ள அதே புலனாய்வுப் பிரிவான சி.ஐ.டி.யினாலேயே கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் டீ34097 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் உண்மைகள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன என்றும் எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில், தற்போதைய சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் சி.ஐ.டி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் , ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சி.ஐ.டி அதிகாரிகளாலேயே கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில், அதே நபரின் அதிகாரத்தின் கீழ் எனது கணவரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதும் நடத்தும் விதமும் நடுநிலைமை,நியாயம் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இந்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவது, மிக உயர்ந்த அதிகார மட்டங்களில் மறைமுகப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடும்.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான மூவர் அடங்கிய விசாரணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் சவாலுக்குட்படுத்தப்படாமல் இன்னும் செல்லுபடியாக உள்ள நிலையில், அதற்கு முந்தைய விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட பிற தரப்பினரிடமிருந்து பழியைத் திசை திருப்புவதற்காக, எனது கணவர் ஒரு பலிக்கடாவாக்கப்படுகிறார் என்ற ஆழமான மற்றும் கவலையளிக்கும் எண்ணம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதித் தேர்தல் தேர்தல் அறிக்கையில்இ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தன்னிச்சையான மற்றும் அடக்குமுறைத் தன்மை காரணமாக அதனை ஒழிப்பதற்கான அர்ப்பணிப்பு மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எனவே, தற்போதைய நிர்வாகத்திற்குள் இருக்கும் சக்திவாய்ந்த நபர்களால் தனிப்பட்ட மற்றும் பழிவாங்கும் நோக்கங்களுக்காக அதே விதிகள் இப்போது பயன்படுத்தப்படுவதைக் காண்பது ஆழ்ந்த மனச்சோர்வை அளிக்கிறது. மேலும், அநீதியாகத் தோன்றும் ஒரு செயல்பாட்டில் மேதகு உங்களின் மதிப்பிற்குரிய அலுவலகமும் அதிகாரமும் பயன்படுத்தப்படுவது இன்னும் கவலையளிக்கிறது.
எனது கணவரைத் தடுப்புக்காவலில் இருந்து விடுவிப்பதற்கு உடனடியாக தலையிடுமாறு அல்லது குறைந்தபட்சம் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அவரை விளக்கமறியல் காவலுக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்.சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான மற்றும் நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.சட்டத்திற்கு இணங்க அவரது அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.





