நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு தயார் - சபாநாயகர்
நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை யாருக்கு வேண்டுமானாலும் கொண்டுவர முடியும். அது ஜனநாயக உரிமையாகும்.
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை என்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறு கையளிக்கப்பட்டால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் 14-07-2026 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,நீதி அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சியினர் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என்றாலும் அது தொடர்பில் எனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை யாருக்கு வேண்டுமானாலும் கொண்டுவர முடியும். அது ஜனநாயக உரிமையாகும். என்றாலும் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எனக்கு இதுவரை கையளிக்கப்படவில்லை.
அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டால், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பின்வாங்கப்போவதில்லை.
இதற்கு முன்னரும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிக்கப்பட்டு, அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அரசியலமைப்பின் பிரகாரம் நாங்கள் செயற்படுவோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
அதேநேரம் கடந்த பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில் 10ஆவது பாராளுமன்றம் மிகவும் நல்லமுறையில் செயற்படுகிறது. ஒரு சில குறைபாடுகள் இருக்கலாம். என்றாலும் பாராளுமன்ற ஒழுக்கம் தொடர்பிரல் நாங்கள் மிகவும் கடினமாக இருக்கிறோம். அது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
எந்தவொரு மோசமான நடவடிக்கையையும் ஒரேயடியாக நிறுத்த முடியாது. அதனால் தற்போதும் பாராளுமன்றத்தில் ஒருசில சச்சரவுகள் மோதல்கள் ஏற்படுகின்றன. அதனால் சிறந்த அரசியல்வாதிகளை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்து அனுப்பும்வரை நாங்கள் பொருத்திருக்க வேண்டும் என்றார்.





