எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் - சம்பிக்க ரணவக்க
அந்த 57 பில்லியன் ரூபா பெரும்பாலும் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிடும்.
நிலக்கரி மோசடியினால் ஏற்பட்ட நேரடி நட்டம் காரணமாகவும் இதனால் மின்சார உற்பத்திக்காக டீசலை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மறைமுக நட்டம் காரணமாகவும் நிச்சயமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும். அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வழங்கிய 695 மில்லியன் டொலர் கடனுக்கு நூற்றுக்கு 8வீத வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்கட்சி 01-06-2026 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் 57 பில்லியன் ரூபா மட்டுமே அனுமதித்துள்ளது. அந்த 57 பில்லியன் ரூபா பெரும்பாலும் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிடும். அப்படியானால், அடுத்த மாதம் வரும்போது மீண்டும் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில்தான் மத்திய கிழக்கில் பணிபுரியும் சகோதர, சகோதரிகளின், அதேபோன்று கொரியாவில் பணிபுரியும் பிள்ளைகளின் உழைப்பு நமது ஜனாதிபதிக்கு நினைவுக்கு வருகிறது.. அப்படிப்பட்ட கடின உழைப்பில்தான் டாெலர்கள் ஈட்டப்பட்டுள்ளன. ஆனால் பெலவத்தையிலிருந்து மோசடி மற்றும் ஊழல் மூலமாக இந்த டாெலர்களைக் கொள்ளையடிக்கும் போது, அத்தகைய எந்தவொரு இரக்கமும் ஜனாதிபதிக்கு இருக்கவில்லை.
'நான் இவற்றை அதிகரிக்கிறேன்' என்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நாமும் சர்வதேச நாணய நிதியத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறுகிறோம், அவர்களின் நிபந்தனைகளில் நல்லாட்சி நிபந்தனைகளும், ஊழல் எதிர்ப்பு நிபந்தனைகளும் இருந்தன. அவை குறித்து ஆராய்ந்து பார்க்காமல், இந்த அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்த நமது எதிர்ப்பை சர்வதேச நாணய நிதியத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் , நாணய நிதியத்திடடமிருந்து 695 மில்லியன் டாெலர்கள் கிடைத்தன, அதன் வட்டி 8வீதமாகும். மிக அதிக வட்டிக்குக் கிடைத்த ஒரு கடன் இது.மாறாக சாதாரண 0.1 வட்டி கொண்ட ஜைக்கா கடன் அல்ல. 8 வீதத்துக்கு அதிகமாக இருக்குமே தவிர குறையாது என்றார்





