கட்டுப்படுத்த முடியாத வகையில் நாட்டின் பொருளாதரம் வீழ்ச்சியடைகிறது - ராஜித்த
மக்களுக்கு உணவளிக்கப் பணமில்லை, எதுவுமே இல்லாத ஒரு நாட்டில் அன்று இதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத வகையில் நாட்டின் பொருளாதரம் வீழ்ச்சியடைந்து செல்கிறது. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும். அன்று ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும்போது இதனைவிட பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தது. என்றாலும் இரண்டு வருடங்களில் நாட்டை மீள கட்டியெழுப்ப அவர் நடவடிக்கை எடுத்தார் என முன்னாள் அமைச்சர் ராஜித்த நேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்கட்சி 01-06-2026 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அன்று சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் எவ்வாறு பணியாற்றினோம்? எவ்வாறு நமது மக்களுக்காகத் தீர்மானங்களை எடுத்தோம்? இன்று ஏன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது? இதையே நாம் பார்க்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க அன்று எதிர்கொண்ட நெருக்கடி என்பது இன்று மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஏதோ ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி அல்ல. இங்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் உடைந்து விழுந்திருந்தன. இந்நாட்டில் உண்பதற்கு உணவு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை, மின்சாரம் இருக்கவில்லை. அது மாத்திரமன்றிப் பணம் இருக்கவில்லை, உணவுப் பொருட்கள் இருக்கவில்லை.
அனைத்து வகையான நெருக்கடிகளையுமே அன்று ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்டார். அத்தகையதொரு நெருக்கடியைக் கையில் எடுத்து, இரண்டு ஆண்டுகள் செல்லும்போது அனைத்துப் பொருளாதாரக் சுட்டிகளையும் மேம்படுத்த முடிந்ததென்றால், அவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ள சுட்டிகள் மத்திய கிழக்கு போர் ஒன்று வந்ததனால், இந்த ஒரேயொரு காரணத்திற்காக எவ்வாறு சரிந்து விழ முடியும்?
அன்று இலங்கைபஞ்சம் மற்றும் நோயால் சீரழிந்த நகரம் போல இருந்தது. இந்நாட்டில் எதுவும் இருக்கவில்லை. மக்கள் நான்கு, ஐந்து கிலோமீட்டர் வரிசைகளில் நின்றுகொண்டிருந்தார்கள். வாகனங்கள் மற்றும் மக்கள் வரிசைகளில் இருந்தார்கள். அப்படியொரு அராஜக நிலை இந்நாட்டில் ஏற்பட்டிருந்தது. திறைசேரியின் வெளிநாட்டு நாணய இருப்பு 20 மில்லியன் டாெலர்கள் வரை சரிந்து வீழ்ந்திருந்தது. எதுவும் இருக்கவில்லை, பொருட்களைக் கொண்டுவரப் பணமில்லை, மக்களுக்கு உணவளிக்கப் பணமில்லை, எதுவுமே இல்லாத ஒரு நாட்டில் அன்று இதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டைப் பொறுப்பேற்கும்போது பொருளாதார வளர்ச்சி வீதம் மறை 17.2 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. அதாவது பொருளாதார வளர்ச்சி அல்ல, பொருளாதாரம் மறை 17.2 வீத வேகத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்ததுஎன்றார்.





