கபில சந்திரசேனவின் மனைவிக்கு பகிரங்க பிடியாணை
குறித்த தொகையை அரசுடைமையாக்குவதற்கு முன்னர் அவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானக் கொள்வனவின்போது இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி நயோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்படி வழக்கு 17-08-2026 அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கு விசாரணையின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான அதிகாரிகள் விளக்கமளிக்கையில், இந்த வழக்கில் 2 ஆவது சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி நயோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் நாள் குறிப்பிட்டு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணையை ஆங்கில மொழியில் பிறப்பிக்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இதேவேளை குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்காகப் பிணைதாரர்களாக முன்னிலையான கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வா, அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா ஆகியோர், தற்போது பிணையிலிருந்து விலகுவதற்காகக் கோரியுள்ளதோடு, குறித்த 10 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையை அரசுடைமையாக்க முடியும் எனவும் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் வழக்குக் கோப்பினைப் பார்வையிட்ட நீதிவான், 10 மில்லியன் ரூபா அல்ல 200 இலட்சம் ரூபா பணத்தை நீதிமன்றத்துக்குச் செலுத்த வேண்டும், குறித்த தொகையை அரசுடைமையாக்குவதற்கு முன்னர் அவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தொடர்ந்து தெரிவிக்கையில், பிணையாளர்களான தனது சேவைபெறுநர்கள் அவசர தேவைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், 2 ஆவது சந்தேகநபருக்குப் பிணைதாரர்களாக முன்னிலையான இருவரும் பிணையிலிருந்து விலகுதல் மற்றும் குறித்த பணத்தை அரசுடைமையாக்குவதற்கான எழுத்து மூல ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும், நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான், எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி நயோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை ஆங்கில மொழியிலும் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார். அதற்கமைய மேற்படி வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.





