ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணைக்கு
மத உணர்வுகளை புண்படுத்தியமை தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவையின் 291 ஆவது அத்தியாயத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்தது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாம் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களைச் செய்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு முன்னரான மாநாட்டுக்காக 01-06-2026 அன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த முன்னாயத்தங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.
அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு திகதிகள் குறிக்கப்படும் என நீதிபதி திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
மத உணர்வுகளை புண்படுத்தியமை தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவையின் 291 ஆவது அத்தியாயத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜரானார். முதல் சாட்சியாளருக்கு நீதிமன்றினால் அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததுடன், அவருக்காக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நீதிமன்றில் பிரசன்னமானார்.





