ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரனை விடுவிக்க மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இரத்து
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்காமல் அவர்களை விடுதலை செய்வதற்கு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய குழாம் பிறப்பித்த உத்தரவு தவறு என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிணைமுறி மோசடியின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் பர்பசுவல் டிரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பொதுச்சட்டத்தின் பிரகாரம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இயலுமை காணப்படுகின்ற நிலையில், வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட திறைசேரி பிணைமுறி வழங்கலின் போது, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பர்பசுவல் டிரெஷரீஸ் லிமிடெட் , இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பலருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதிவாதிகளை விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சவால் விடுத்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்துள்ளதை அடுத்து, பிரதிவாதிகளுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணைகள் இனிமேல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் வழக்கு விசாரணைகளை விரைவாக முன்னெடுக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.





