ரில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் ஆராயுங்கள் - மனோ கணேசன் எழுத்து மூலமாக கோரிக்கை
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பி;ல்லியன் ரூபா தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்காகவும், நிவாரணமளிப்பதற்காகவும் செலவழிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தச் செலவு தலைப்பிற்கோ அல்லது வேறு நோக்கத்திற்கோ மாற்றுவதற்கு பாராளுமன்றம் எந்த அனுமதியையும் வழங்கவில்லை. தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவாகி விட்டது என்று ரில்வின் சில்வா தெரிவிப்பது உண்மையானதாயின், அந்நிதி பாராளுமன்ற அங்கீகாரமின்றி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கக்கூடும். இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளரும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான அங்க கட்சியின் உறுப்பினருமான ரில்வின் சில்வா வெளியிட்டதாக ஊடகங்களில் செய்தியாகப் பரவியுள்ள ஒரு கருத்தை மேற்கோளாகக் கொண்டு கடிதத்தை எழுதுகின்றேன்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டு இருந்த நிதி தித்வா அனர்த்த மீள்கட்டுமான பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டதாக டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளாக அறிய முடிகிறது. பொதுநிதி மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை தொடர்பான மிகக் கவலைக்குரிய ஒரு விடயத்தை எழுப்புகின்ற மேற்கண்ட கூற்றின் மீதே நான் எனது கவனத்தை மட்டுப்படுத்துகின்றேன்.
எனக்குத் தெரிந்த வரையில், மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தச் செலவு தலைப்பிற்கோ அல்லது வேறு நோக்கத்திற்கோ மாற்றுவதற்கு பாராளுமன்றம் எந்த அனுமதியையும் வழங்கவில்லை. டில்வின் சில்வா கூறியதாக கூறப்படும் மேற்கண்ட கருத்து உண்மையானதாயின், அந்நிதி தேவையான பாராளுமன்ற அங்கீகாரமின்றி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கக்கூடும்.
ரில்வின் சில்வா குறிப்பிட்ட கருத்தை ஆராய்ந்து, பொதுநிதி தொடர்பான குழு இவ்விடயத்தை விசாரித்து, மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஏதேனும் மாற்றம், மறு ஒதுக்கீடு அல்லது செலவீனம் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கும் நிதி ஒழுங்குவிதிகளுக்கும் முரணான வகையில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குழு சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்து, தனது அதிகார வரம்பிற்குள் பொருத்தமானதாக கருதும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பி;ல்லியன் ரூபா தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்காகவும், நிவாரணமளிப்பதற்காகவும் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதி செலவாகியுள்ளதால் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது. வெளியக நெருக்கடிகள் ஏதும் தோற்றம் பெறாவிடின் அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கடந்த மாதம் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட காரியால திறப்பு நிகழ்வின் போது குறிப்பிட்டிருந்தார்.
ரில்வின் சில்வாவின் கருத்துக்கு சமூக கட்டமைப்பில் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்ட பின்னணியில் மாகாணசபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.





