இலங்கையுடன் நிற்கிறோம்: தென்னாபிரிக்க ஜனாதிபதி
தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கிவருகின்றன.
இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் மீட்புப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்களுடனும் தாம் உடன்நிற்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
' தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கிவருகின்றன.
அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக இப்பிராந்தியத்தில் பாரிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
'அண்மையில் நான் விஜயம் மேற்கொண்ட இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டிருக்கும் மிகமோசமான பேரழிவுகள் குறித்து நான் மிகுந்த கவலையடைகிறேன்' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் மீட்புப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்களுடனும் தாம் உடன்நிற்பதாகவும் தென்னாபிரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.





