சர்வதேச அமைப்புகளுக்கு பெரும் பொறுப்புள்ளது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய நவீன தொழில்நுட்பக் காலத்தில், போர் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடாது.
போர் சூழல்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளுக்கு இந்த நேரத்தில் பெரும் பொறுப்பு காணப்படுகிறது. அந்த அமைப்புகள் தமது முழுச் சக்தியையும் பயன்படுத்தி போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 04-03-2026 அன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், போரினால் உயிரிழந்த அனைத்து தரப்பினருக்காகவும் இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதில் அரச தலைவர்கள், இராஜதந்திரிகள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் போரின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் கவலை கொள்கின்றோம்.
இந்த மோதல்கள் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரார்த்தனையாகும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் காண வேண்டும். இத்தகைய போர்ச் சூழல்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளுக்கு இந்த நேரத்தில் பெரும் பொறுப்பு காணப்படுகிறது. அந்த அமைப்புகள் தமது முழுச் சக்தியையும் பயன்படுத்தி போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நவீன தொழில்நுட்பக் காலத்தில், போர் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடாது. அது எப்போது எங்கு விரிவடையும் என்று கூற முடியாது. ஒரு நாடாக, இந்த மோதல்களைக் குறைப்பதற்கு எந்த வகையில் தலையிட முடியுமோ அல்லது கோரிக்கை விடுக்க முடியுமோ, அந்த வகையில் இலங்கை செயலாற்றும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெருமளவிலான இலங்கையர்கள் பணியாற்றுவதாலும், உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அமைதிக்கு இது அச்சுறுத்தலாக அமைவதாலும், யார் இந்தப் போரைத் தொடங்கினாலும் அல்லது இது எவ்வளவு தூரம் வளர்ந்திருந்தாலும், இந்த மோதல்கள் மிக விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றார்.





