நாட்டை நாசமாக்கியவர்களிடமிருந்து ஆலோசனை பெறத் தேவையில்லை -பிரதி அமைச்சர் எரங்க
அன்று அவர்கள் மேற்கொண்ட தவறான நிர்வாகத்தால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதை யாரும் மறக்க முடியாது.
நாட்டை நாசமாக்கியவர்களிடமிருந்து நாம் ஆலோசனை பெறத் தேவையில்லை. எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமூகத்தில் அறிவும் புரிதலும் கொண்டவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, அதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தைத் திட்டமிட்டு முன்னெடுக்கிறது நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 02-06-2026 அன்று நடைபெற்ற பிரஜ சக்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இன்று எதிர்க்கட்சியினர் எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது, அரசாங்கத்தின் மீதான அக்கறையினால் அல்ல. அது அவர்களின் அரசியல் நாடகம். கடந்த காலங்களில் நாட்டைப் படுகுழிக்குத் தள்ளியவர்கள், அரசாங்கத்தின் கஜானாவை முற்றாகக் காலி செய்துவிட்டு, நாட்டுக்கு எரிபொருள் கப்பல்கள் கூட வருவதற்குத் தயங்கிய ஒரு சூழலை உருவாக்கியவர்கள் இவர்கள்தான்.
அன்று அவர்கள் மேற்கொண்ட தவறான நிர்வாகத்தால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதை யாரும் மறக்க முடியாது. இன்று நாட்டின் கஜானாவில் டொலர்களும் ரூபா களும் இருக்கும்போது, உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் போர்ச் சூழல் காரணமாகவே நாம் இக்கட்டான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. இதனை முகாமைத்துவம் செய்யவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.





