நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பு - ரணில்
அரசாங்கம் இதற்காக அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு, அவர்கள் நீதித்துறையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பக்கச்சார்பற்ற தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய இளைஞர் முன்னணியின் 'ஸ்மாட் யூஎன்பி' பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ரணிலுடன் வாசிப்போம்' இளைஞர் கலந்துரையாடல் நிகழ்வு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டிருந்தவர்களினால் கேட்கப்பட்ட 'கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு சட்டத்துறைக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டத்துறையைச் சேர்ந்த பெரும்பான்மையினரும், நீதிபதிகளும் கூட ஓய்வுபெறும் வயதெல்லையை 65 வயதுக்கு மேல் நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தபோதும் இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கமே அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
நாட்டுக்குள் இது தொடர்பில் தற்போது பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அரசாங்கம் இதற்காக எவ்வளவு தூரம் செல்லத் தயாராக உள்ளது என்பது கேள்வியாக உள்ளது. அரசாங்கம் இதற்காக அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு, அவர்கள் நீதித்துறையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
இதுதொடர்பில் இறுதித் தீர்மானம் அரசாங்கத்திடமே இருந்தாலும், இந்த யோசனையைச் செயற்படுத்த முயற்சிப்பதன் மூலம் அரசியல் மற்றும் அரசியல் சாராத ஆகிய இரு தரப்பிலிருந்தும் எழும் எதிர்ப்பு மேலும் வலுவடையக்கூடும்.
அரசாங்கத்திற்கு இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், அரசியல் மற்றும் அரசியல் அல்லாத துறைகளிலிருந்தும் இதைவிட அதிக எதிர்ப்பு உருவாகும் என்று நான் நினைக்கிறேன். என்றார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையில் நீங்கள் ஜனாதிபதியாக இருந்தால், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவ்வாான தீர்மானங்களை மேற்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில், அதுபற்றி சிந்திக்க தற்போது நான் ஜனாதிபதியல்ல.
என்றாலும் பரம்பரை காலத்தில் எமக்கு அதிகாரம் கிடைத்த சந்தர்ப்பங்களில், அன்றைய உலக்கு ஏற்றவகையில் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
தற்போது இந்த காலத்தில் இருப்பவர்கள் மாறிவரும் இந்த உலகத்துக்கு ஏற்றவகையில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காக யாராவது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முன்வருமாக இருந்தால், அவர்களுக்கு ஆலாேசனை வழங்கி உதவி செய்ய நான் தயாராக இருகிறேன் என்றார்.





