பிள்ளையானின் அடிப்படை மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு
தனது சேவை பெறுநரை கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் அவருக்கு குறிப்பிடவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், வழக்கு தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜூன ஒபேசேகர, கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 02-06-2026 அன்று இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ' பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தனது சேவை பெறுநரை கைது செய்து, தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமான செயற்பாடு' என்று விடயங்களை முன்வைத்தார்.
தனது சேவை பெறுநரை கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் அவருக்கு குறிப்பிடவில்லை. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். 19 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் விவகாரம் தொடர்பில் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டாலும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந்த விடயத்துக்காக கைது செய்வதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் கிடையாது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவை பெறுவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு போதுமான விடயங்களை முன்வைக்கவில்லை. ஆகவே தடுப்புக் காவலுக்கான அனுமதி பெற்றுக்கொண்ட விதமும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று விடயங்களை முன்வைத்தார்.





