மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் - பொதுஜன பெரமுன
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய தீர்மானம் எடுக்கும் பெரும்பான்மை பலம் ஆளும் தரப்பிடம் உள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம். பழைய தேர்தல் முறையோ அல்லது புதிய தேர்தல் முறையோ என்பது முக்கியமல்ல, எத்தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களும், மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்காகவே மாகாணசபைத் தேர்தல் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. எல்லை நிர்ணய அறிக்கையை அப்போதைய அரசாங்கம் சமர்ப்பித்து அரசாங்கமே அதனை தோற்கடித்து மாகாணசபைத் தேர்தல் முறைமையை நெருக்கடிக்குள்ளாக்கி, இன்றளவில் சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தினோம். ஆனால், கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம் அதனுடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
இவ்வாறான பின்னணியில் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாக தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்குறுதியளித்தது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய தீர்மானம் எடுக்கும் பெரும்பான்மை பலம் ஆளும் தரப்பிடம் உள்ளது.இருப்பினும் மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம். பழைய தேர்தல் முறையோ அல்லது புதிய தேர்தல் முறையோ என்பது முக்கியமல்ல, எத்தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.





