2.5 மில்லியன் டொலர் மோசடி; தனிப்பட்ட அறிக்கையை ஏற்க முடியாததென ஹர்ஷ அறிவிப்பு
பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் தான் இந்த விவகாரத்தில் நிதியமைச்சு செயற்பட்டுள்ளது.
எனது தனிப்பட்ட பரிசீலனைக்கு மாத்திரம் என்று குறிப்பிட்டு திறைசேரியின் செயலாளர் 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம் தொடர்பில் அனுப்பி வைத்த அறிக்கையை ஏற்கவில்லை.அறிக்கையை இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தனிப்பட்ட முறையில் பரிசீலனை செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதுவாக இருந்தாலும் குழுவுக்கே சமர்ப்பிக்க வேண்டும். என்னால் தனிப்பட்ட முறையில் செயற்பட முடியாது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்க நிதி பற்றிய குழு 02-06-2026 அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் முழுமையான அறிக்கையை அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு திறைச்சேரியின் செயலாளருக்கு குழு அறிவித்திருந்தது.இதற்காக அவருக்கு நான்கு வார காலவகாசமும் வழங்கப்பட்டது.
முழுமையான அறிக்கையானது தாமதமாகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அனுப்பி வைத்துள்ள அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தனிப்பட்ட பரிசீலனைக்கு மாத்திரம் என்று குறிப்பிட்டு அறிக்கை எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாவேன்.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பதவி வகிக்கிறேன்.தனிப்பட்ட முறையில் பரிசீலிப்பதற்காக அறிக்கை கோரவில்லை. குழுவின் பரிசீலனைக்காவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காகவும் அறிக்கை கோரினோம்.
எனது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்வதை மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளேன்.பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.இந்த நிதி மோசடி தொடர்பில் இன்று (நேற்று) சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்துரையாடினோம்.
பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் தான் இந்த விவகாரத்தில் நிதியமைச்சு செயற்பட்டுள்ளது. எனக்கு தனிப்பட்ட முறையில் அறிக்கை அனுப்புவது முறையற்றது. அது பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை மலினப்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முழுமையான அறிக்கையை இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு திறைச்சேரியின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளோம். விரைவான நடவடிக்கைகள் ஊடாகவே அடுத்தக்கட்ட தீர்மானங்களை எடுக்க முடியும் என்றார்.





