நிலக்கரியில் ஊழல், மோசடி - அநுர அரசின் தார்மீக தவறு
மக்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியும், கணக்காய்வு அறிக்கையின் அசைக்க முடியாத சான்றுகளுமே இந்த இராஜினாமாவுக்கு பின்னாலுள்ள உண்மையான காரணங்களாகும்.
‘ஊழலற்ற நிர்வாகம்’ மற்றும் ‘தூய்மையான அரசியல்’ எனும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அதன் ஆறு மாத காலப்பகுதியிலேயே நிலக்கரி கொள்வனவு ஊழல் மற்றும் அமைச்சரின் பதவி விலகல் மூலம் பாரிய அரசியல் மற்றும் தார்மீகச் தவறை இழைத்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளமையானது, அரசாங்கம் கூறிவந்த ‘புதிய அரசியல் கலாசாரம்’ நடைமுறை நிர்வாகச் சிக்கல்களில் எவ்வாறு தடுமாறுகிறது என்பதற்கான நேரடிச் சான்றாகும்.
நுரைச்சோலை மின்நிலையத்திற்காக 2025-2026 காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி, நாட்டிற்கு 2,237.7 மில்லியன் ரூபா நேரடி நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை புள்ளிவிபரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது.
தகுதி குறைந்த நிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கான ஒப்பந்தங்களை வழங்கியமையும், நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறைவான நிலக்கரியை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டமையும் பாரிய நிர்வாகச் சீர்கேடாகும்.
குறிப்பாக, ‘வுசனைநவெ ஊாநஅிாயச’ போன்ற நிறுவனங்களுக்கு விதிகளுக்குப் புறம்பாக சலுகைகள் வழங்கப்பட்டமை கொள்வனவுச் சபையின் நேர்மையைப் பகிரங்கமாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி அலகுகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகள் இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பின் முதுகெலும்பையே அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.
சர்வதேசத் தரக்கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளி, உரிமம் இரத்து செய்யப்பட்ட ஆய்வக அறிக்கைகளை ஏற்றுக்கொண்டமை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒரு குற்றமாகும்.
இத்தகைய நிர்வாகத் தவறுகளால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவு, இறுதியில் மின்சாரக் கட்டண உயர்வு மூலம் அப்பாவி மக்களின் தலையிலேயே சுமத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அணுகுமுறை மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ‘நிலக்கரியைச் சாப்பிட்டுப் பார்த்து வாங்க முடியாது’ என்ற அவரது கிண்டலான கருத்து, ஒரு பொறுப்புக்கூற வேண்டிய நாட்டின் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கண்ணியமான பதிலாகத் தெரியவில்லை.
அமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் தோற்கடித்த அரசாங்கம், அடுத்த ஒரு வாரத்திற்குள் அவரைப் பதவி விலகச் செய்தமை ‘தற்காப்பு’ அரசியலன்றி வேறில்லை.
மக்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியும், கணக்காய்வு அறிக்கையின் அசைக்க முடியாத சான்றுகளுமே இந்த இராஜினாமாவுக்கு பின்னாலுள்ள உண்மையான காரணங்களாகும்.
கடந்த கால அரசாங்கங்களின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி தற்போதைய மோசடிகளை நியாயப்படுத்த முனைவது, மாற்றத்தை விரும்பி இந்த ஆட்சிக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்.
அமைச்சரின் பதவி விலகல் என்பது ஒரு தொடக்கமே தவிர, அதுவே இறுதித் தீர்வாகாது. இழந்த மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமானால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, வரி செலுத்தும் மக்களின் பணம் எவ்வாறு வீணடிக்கப்பட்டது என்பதற்கு அரசாங்கம் வெளிப்படையான பதிலை வழங்க வேண்டும்.
ல்லையேல், ‘திருடர்களைப் பிடிப்போம்’ என்ற கோஷம் வெறும் தேர்தல் காலத்துக்கான கவர்ச்சிப் பேச்சாகவே வரலாற்றில் எஞ்சி நிற்கும். தார்மீக ரீதியாக வீழ்ந்துள்ள தனது அரசாங்கத்தின் அபிமானத்தை மீட்டெடுப்பதே அநுர அரசாங்கத்திற்கு இப்போதுள்ள மிகப்பெரிய சவாலாகும்.





