காணாமலாக்கப்பட் உறவினர்களின் வலிகள் எப்போது அரசுக்கு விளங்கும் - ரவிகரன்
மத்தியகிழக்கின் அதிர்வுகளுக்கே அவசர நிலை தேடும் உங்களுக்கு அருகிலுள்ள எங்களின் அவதிகள் எப்போது தான் புரியப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
மத்திய கிழக்கின் அதிர்வுகளுக்கே அவசர நிலைதேடும் இலங்கை அரசாங்கத்துக்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமது உறவுகளைக் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் வலிகள் எப்போது விளங்குமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 06-03-2026 அன்று நடைபெற்ற அவசரகால சட்டம் அமலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது : வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி அவர்களின் உறவுகளால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் மார்ச் 8ஆம் திகதியுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவுசெய்து பத்தாவது ஆண்டாகத் தொடரவுள்ளநிலையிலும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை
என்னுடைய மகன் வருவான், என்னுடைய மகள் வருவாள், என்னுடைய கணவன் வருவார், என்னுடைய மனைவி வருவார், என்னுடைய அப்பா வருவார், என்னுடைய அம்மா வருவார் என்ற எதிர்பார்ப்போடு தினமும் காத்திருந்து மாறி வரும் அரசுகளையும் நம்பி ஏமாந்து,சர்வதேசத்திடமும் நீதி கேட்டு ஏங்கி ஏங்கியே ஒவ்வோர் உறவும் ஏக்கத்தோடு மரணிக்கின்றனர்.
இலங்கை அரசின் பிள்ளை உளவியல்,பெண்ணிய விடுதலை, பாலின சமத்துவம், மனித உரிமை, முதியோர் நலன் பேணல் அனைத்துமே காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உங்களின் நீதியில் பொய்த்துப்போயுள்ளது.மத்தியகிழக்கின் அதிர்வுகளுக்கே அவசர நிலை தேடும் உங்களுக்கு அருகிலுள்ள எங்களின் அவதிகள் எப்போது தான் புரியப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.





