அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் தனிநபர்களுக்கு அச்சுறுத்தல் - நாமல்
அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்தும் நிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் தனிநபர்கள் கடும் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதுடன், சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
கேகாலை, தெடிகம பிரதேசத்தில் 19-07-2026 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் நபர்களிடம் விசாரணை நடத்தும் நிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
எனக்கு தெரிந்தளவில் இதுவே அதிகப்படியான தற்கொலைகள் பதிவாகும் காலப்பகுதியாகும். அரசாங்கத்திற்கு எதிராகப் பேசிய சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடத்தும் போது, அவர்களையும் இறுதியில் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்று மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை கைதுசெய்து அவர்களை அச்சுறுத்துவதும் அவர்களுக்கு மன அழுத்தம் பிரயோகிப்பது தொடர்பாக தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. அதனால் அரசாங்கத்தின் இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.





