செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற முடியாது - சதுரங்க அபேசிங்க
இதற்காக 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் உலகை ஆக்கிரமித்தாலும் மனிதர்களின் படைப்பாற்றல் தனித்துவமான திறன்களை அவற்றால் ஒருபோதும் மாற்றீடு செய்ய முடியாது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் அமைச்சு மற்றும் ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய NVQ – 4 சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையின் தொழில்முனைவோர் நாட்டின் சிறிய சந்தைக்குள் மாத்திரம் முடங்கிப் போய் போட்டியிடுவதில் எந்த பயனில்லை. உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் இணைந்து சர்வதேச சந்தையை குறிக்க வைக்க வேண்டும். கொழும்பு பங்குச் சந்தையை வென்று தற்போது சர்வதேச அளவில் காலபதித்துள்ள ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் இதுவரை காலமும் வழங்கப்பட்ட தொழில்முறைப் பயிற்சிகள் சந்தைத் தேவைக்கு ஏற்ப அமையாததாலும், பின்தங்கிய பொருளாதரா நிலை காரணமாகவும் இளைஞர்கள் இப்பயிற்சிகளில் ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் வறுமை காரணமாக பல இளைஞர்கள் நீண்டகாலப் பயிற்சிகளில் ஆடுபட முடியாமல் குடும்பத்தை காப்பாற்ற உடனடியாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, இந்த குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி 9 ஆம் வகுப்பிலேயே மாணவர்கள் தமது திறமைகளுக்கு ஏற்ப 12 வெவ்வேறு கல்வி அல்லது தொழில்முறைப் பயிற்சி பாதைகளில் தமக்கு விருப்பமானதைத் தேர்தெடுக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும். அத்துடன் இளைஞர்கள் தமது உறவுகளையும் தாய்நாட்டையும் பிரிந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கஷ்டமான நிலையை மாற்றி அவர்கள் உள்நாட்டிலேயே தங்கி வாழ்வதற்கான வலுவான பொருளாதரத்தை தற்போதைய அரசாங்கம் கட்டியெழுப்புவதுடன், வீழ்ச்சியடைந்திருந்த தேசிய கைவினைப் பேரவை மற்றும் வடிவமைப்பு மையங்களை தற்போதைய அரசாங்கம் மறுசீரமைத்து வருகின்றது. இதற்காக 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சான்றிதழ்களை பெற்ற மாணவர்கள் வெறும் ஊழியர்களாக மாத்திரம் இருந்துவிடாமல் சில வருடங்கள் அனுபவத்தை பெற்று எதிர்கால்த்தில் சொந்தமாக தொழிலைத் தொடங்கி சிறந்த தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இலங்கை பாரிய பொருளாதார மாற்றத்தை சந்திப்பது உறுதி என்றார்.





