டெங்கு மரணங்களில் 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள்: தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், குடும்பப் பொறுப்புகள் காரணமாக பலர் தங்கள் உடல் நிலையை அலட்சியப்படுத்துகிறார்கள்.
டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதால், நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் அவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 20-07-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள் ஆவர். பெண்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதற்கு அவர்கள் சுகவீனமுற்ற பின்னரும் போதிய ஓய்வெடுக்காமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் காட்டுவது முக்கிய காரணம்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், குடும்பப் பொறுப்புகள் காரணமாக பலர் தங்கள் உடல் நிலையை அலட்சியப்படுத்துகிறார்கள். இவ்வாறான காலதாமதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுத்து இறுதியில் உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும், பப்பாசி இலைச்சாறு, பலா இலை பானங்கள் அல்லது மொனரகுடும்பிய போன்ற நிரூபிக்கப்படாத பாரம்பரிய மற்றும் வீட்டு வைத்தியங்களை நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானது. காய்ச்சல் உள்ளவர்கள் பெரசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் தானாக உட்கொள்ளக் கூடாது. வீட்டு வைத்தியங்களை நாடி நிலைமை மோசமடைந்த பின்னர் பலர் வைத்தியசாலைக்கு வருவதால், அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
கடந்த சில வாரங்களில் டெங்கு பரவல் சற்று குறைந்திருந்தாலும், நிலைமை இன்னும் உயர் ஆபத்து மட்டத்திலேயே உள்ளதால் நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் முதல் நாளிலேயே தகுதியுள்ள வைத்தியரை அணுக வேண்டும். சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்து நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது அனைவரின் பொறுப்பு ஆகும் என்றார்.





