நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்புக்கு பாராளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படும் - மனோ கணேசன்
எமது இந்தச் செயற்பாடு ஒரு புதிய அரசியல் கூட்டணி அல்ல, அது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. நாம் ஒரு கூட்டணியை அமைக்கவில்லை,
நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான விடயத்தில், எதிர்க்கட்சியாகிய நாம் ஒன்றிணைந்து அதற்கு பாராளுமன்றத்தில் எமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் 19-07-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள் தமக்கான இறுதி நீதியைப் பெற்றுக்கொள்ளும் உன்னதமான இடமாக நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறார்கள். நீதித்துறை மற்றும் சட்டம் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் சிதைந்துவிடக் கூடாது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படைத் தத்துவம் இதில்தான் தங்கியுள்ளது. எமது நாட்டில் தகுதியும் நேர்மையும் கொண்ட எத்தனையோ சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அத்தகைய நீதிபதிகளை நாம் மதிக்கிறோம். அவ்வாறிருக்க, ஒன்று அல்லது இரண்டு நபர்களை மையப்படுத்தி அவர்களின் பதவிக் காலத்தை நீடிக்க முயல்வது நாட்டுக்கு மிகவும் தவறான ஒரு முன்னுதாரணத்தையும் செய்தியையும் வழங்கும். எனவே, காலம் கடந்தாவது இந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அதற்கு வெளியேயுள்ள சிவில் சமூக அமைப்புகளுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இது தவறு என்று குரல் கொடுக்கும்போது, அரசாங்கம் குறுக்கு வழிகளைக் கையாண்டு, 'திருடர்கள் அனைவரும் ஒன்றிணைந்துவிட்டார்கள்' என்று எங்களைக் குற்றம் சாட்டப் பார்க்கிறது. பாராளுமன்றத்தில் அண்மையில் அமைச்சர்கள் கூட இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். பொதுவாக நான் இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவதில்லை. நாம் வெவ்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், இந்த முக்கியமான தேசியப் பிரச்சினைக்காகவே ஒன்றிணைந்து இது தவறு என்று கூறுகிறோம். அதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் தனது தவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அரசியல் இலாபம் தேட முனையக் கூடாது.
நாட்டின் தவறை சுட்டிக்காட்டும்போது அரசாங்கத் தரப்பினரும் அவர்களின் சமூக ஊடகப் படைகளும் நாம் அரசியல் செய்வதாகக் கூறுகிறார்கள். இது அரசியல் அல்ல. அரசாங்கங்கள் என்பவை தற்காலிகமானவை, அவை மாறும், புதிய அரசாங்கங்கள் வரும். ஆனால், இலங்கை அரசு என்பது என்றும் நிலையானது. எனவே, இலங்கை அரசைச் சீரழித்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அரசாங்கம் வீழ்ந்தால் புதிய அரசாங்கம் அமையும், அதில் பிரச்சினையில்லை. ஆனால், அரசைப் பலவீனப்படுத்த வேண்டாம். தேசிய மக்கள் சக்தியின் தோழர்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன், அரசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள மார்க்ஸியக் கொள்கைகளைக் கற்றுப் பாருங்கள்.
எமது இந்தச் செயற்பாடு ஒரு புதிய அரசியல் கூட்டணி அல்ல, அது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. நாம் ஒரு கூட்டணியை அமைக்கவில்லை, மாறாக இது ஒரு பொதுவான தளமாகும். இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும், மதத் தலைவர்களுக்கும் எடுத்துரைப்பதற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இந்த மேடையின் ஊடாக இலங்கை என்ற பொது அடையாளத்தை நோக்கி நகர முயற்சிக்கிறோம்.
இறுதியாக, கடந்த காலத்தில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தப் போராட்டப் பங்காளிகளால்தான் இந்த நாட்டில் இருந்த சிங்கள வாதம், தமிழ் வாதம், முஸ்லிம் வாதம் போன்ற அனைத்து தீவிரவாதப் போக்குகளும் அடங்கிப்போயின என்றார்.





