பராமரிப்பு நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்துக்கு சஜித் அவசர பரிந்துரை
அவசர தருணங்களில் இவர்களை மீட்பதற்கான உரிய நெறிமுறைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு முறையாக நிறுவப்பட்டிருந்தனவா என்பது குறித்து தற்போது பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஹொரணை, மில்லனிய பகுதியில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதியோர்கள் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பராமரிப்பு நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கத்திற்கு அவசரப் பரிந்துரையொன்றையும் அவர் விடுத்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தற்போது நாட்டில் முதியோர்களின் சனத்தொகை அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பது சமூகத்தினதும் அரசினதும் முதன்மைக் கடமையாகும். பாதிக்கப்பட்ட இந்தத் தங்குமிடத்தில் விசேட தேவையுடைய முதியோர்களும், இளையோர்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது. அவசர தருணங்களில் இவர்களை மீட்பதற்கான உரிய நெறிமுறைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு முறையாக நிறுவப்பட்டிருந்தனவா என்பது குறித்து தற்போது பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கையில் தற்காலத்தில் இவ்வாறான முதியோர் இல்லங்களும் பராமரிப்பு நிலையங்களும் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் சட்டப்பூர்வத்தன்மை, கண்காணிப்பு மற்றும் தரநிலைகள் குறித்து ஆராய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எனவே, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அரச அதிகாரிகள், இத்தகைய தங்குமிடங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அங்குள்ளவர்களின் மனநலம் குறித்து நேரில் ஆராய வேண்டும். அனைத்துப் பராமரிப்பு நிலையங்களினதும் தரநிலைகளை உடனடியாக மீளாய்வு செய்து, புதிய வழிகாட்டுதல்களை வழங்கும் துரித நடைமுறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
மேலும், எமது முதியோர் சமூகம் தங்களின் முதிர்ந்த வயதில் இவ்வாறான பொதுத் தங்குமிடங்களை நாடிச் செல்வதற்குப் பின்னாலுள்ள சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளை ஆழமாக ஆராய வேண்டியது அவசியமாகும். பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையுணர்வையும் பொறுப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் வளர்த்தெடுப்பது இந்த யுகத்தின் கட்டாயத் தேவையாகும்.





