அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அதிகாரிகள் விசாரணை -அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குச் செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்து இலங்கை அதிகாரிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் கடன் வழங்கல் தரப்புக்குத் திருப்பிச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் மூன்றாம் தரப்பினரால் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு தரவு மாற்றப்பட்டு கணினி ஊடுருவல் மூலம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் வெளியக விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய முறைப்பாடு அளிக்கப்பட்டிருப்பதாகவும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த், அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குச் செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகமும் இலங்கையின் நிதியமைச்சும் அவதானம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா தொடர்ந்து வழங்கும் என்றும் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த் உறுதியளித்துள்ளார்.





