அமெரிக்கா - இலங்கை வர்த்தக செயற்குழு உதயம்
நாட்டின் பெரும்பாகப்பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தும் அமெரிக்க வர்த்தகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஆளுநர் விளக்கமளித்தார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்காகக்கொண்டு அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின்கீழ் 'அமெரிக்கா - இலங்கை வர்த்தக செயற்குழு' என்ற கட்டமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2026 ஆம் ஆண்டுக்கான வசந்தகாலக் கூட்டம் கடந்த வாரம் வொஷிங்டனில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலங்கை சார்பில் பங்கேற்ற மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகத்துறை தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஜே.பி.மோர்கனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர் கருத்தரங்கு, ஜெஃப்ரீஸ் எமேர்ஜிங் மார்க்கெட்ஸ் மற்றும் எச்.எஸ்.பி.சி என்பன இணைந்து நடத்திய முதலீட்டாளர் சந்திப்புகள் மற்றும் அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், தனியார்துறை பிரதிநிதிகளுடனான கூட்டம் என்பவற்றில் பங்கேற்ற ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.
அத்தோடு நாட்டின் பெரும்பாகப்பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தும் அமெரிக்க வர்த்தகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஆளுநர் விளக்கமளித்தார்.
இச்சந்திப்புகளை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்காகக்கொண்டு அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின்கீழ் 'அமெரிக்கா - இலங்கை வர்த்தக செயற்குழு' என்ற கட்டமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது.





