அமெரிக்கா வழங்கிய 'எஸ்.எல்.என்.எஸ். சமுத்ரவிஜய' கப்பல் கடற்படையில் உத்தியோகபூர்வமாக இணைவு
இலங்கை கடற்படையினரின் தொழில்வாண்மைத்துவமும் தொழில்நுட்ப நிபுணத்துவமுமே இந்த நான்காவது பரிமாற்றத்தைச் சாத்தியமாக்கியது எனப் பாராட்டினார்.
அமெரிக்க கடலோர காவற்படையினரால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க 12,000 கடல் மைல் தூரப் பயணத்தை நிறைவு செய்து இலங்கையை வந்தடைந்த 'எஸ்.எல்.என்.எஸ். சமுத்ரவிஜய' கப்பல், கடற்படையின் உத்தியோகபூர்வ பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் 05-06-2026அன்று நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரப் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் ஆகியோர் முதன்மை அதிதிகளாகக் கலந்துகொண்டு கப்பலை உத்தியோகபூர்வமாக கடற்படையில் இணைத்து வைத்தனர்.
இலங்கை கடற்படைக் குழுவினர் கப்பலொன்றை நாட்டிற்குக் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட மிக நீண்ட பயணமாகவும், பனாமா கால்வாயினூடாக இலங்கைக் கடற்படை மேற்கொண்ட முதலாவது வரலாற்றுப் பயணமாகவும் இது அமைந்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள பல்டிமோரிலிருந்து கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி புறப்பட்ட இக்கப்பல், மூன்று சமுத்திரங்களைக் கடந்து மே மாதம் 8 ஆம் திகதி திருகோணமலையை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி லெஃப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவ்ஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான '‘Decisive’' எனப்படும் இக்கப்பல், அமெரிக்காவின் மேலதிக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படைக்கு மாற்றப்பட்ட நான்காவது கப்பலாகும். ஏற்கனவே இலங்கைக் கடற்படையில் சேவையாற்றி வரும் சமுதுர, கஜபாகு, விஜயபாகு ஆகிய அமெரிக்க கப்பல்களுடன் இது இணைந்து கொள்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் இத்திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான கப்பல்களைப் பெற்றுக்கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது.
நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதரக விவகாரப் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், இக்கப்பலானது, சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்பு மற்றும் எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் நீடித்த சின்னமாகத் திகழும் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அலுவலரான லெஃப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவ்ஸ் குறிப்பிடுகையில், இலங்கைக் கடற்படையைப் போன்று இக்கப்பல்களை வெற்றிகரமாகப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்குமான அர்ப்பணிப்பை மிகச் சில பங்காளர்களே வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொழில்வாண்மைத்துவமும் தொழில்நுட்ப நிபுணத்துவமுமே இந்த நான்காவது பரிமாற்றத்தைச் சாத்தியமாக்கியது எனப் பாராட்டினார்.
இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாத்தல், சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல்வழிப் போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்தல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகளின் போது துரிதமாகச் செயற்படுதல் போன்ற இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை இப்புதிய கப்பல் மேலும் வலுப்படுத்தும் எனப் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.





