அரசாங்கத்தின் மலையக அமைச்சர்கள் எங்கே? - மனோ எம்.பி.
மலையகத்தில் நீதியை நிலைநாட்ட முக்கிய இரண்டு விடயங்கள் அவசியமாகும்.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள் எங்கே இருக்கிறார்கள்? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டம், காவத்தை பகுதியில் 22-04-2026 அன்று தோட்ட நிர்வாகத்தின் வன்முறையாளர்களால் வீடற்ற தமிழ் பிரஜையின் வீடு உடைக்கப்பட்ட சம்பவம் மற்றும் அப்பாவிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில், வீடற்ற மலையக தமிழ் பிரஜை ஒருவர் அமைத்த வீட்டை, தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த காடையர்கள் முறையற்ற வகையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான பல இக்கட்டான சம்பவங்களை நான் நேரில் சென்று தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஆனால், தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் அதே வன்முறை கலாசாரம் மற்றும் இனவாதப் போக்கு தொடர்வது வேதனையளிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து ஐக்கிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சந்திரகுமார் எனக்குத் தகவல் வழங்கியதும், உடனடியாக நான் காவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரேமரத்னவைத் தொடர்பு கொண்டு கடும் தொனியில் பேசினேன். சட்டவிரோதமாக வீடு கட்டினார் எனத் தெரிவித்து நிசாந்தகுமார் என்பவர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல், இந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த கணேசன் விஜயகாந்த் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் நான் பேசுகையில், வீட்டுப் பிரச்சினையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசுடன் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீர் தாக்குதல் நடத்திய காடையர்களை முதலில் கைது செய்யும். கைதான நிசாந்தனை பிணையில் விடுவியும் என்று கண்டிப்புடன் கூறினேன். எனது தலையீட்டைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டிருந்த நிசாந்தகுமார் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அமைச்சர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மலையகத்தில் நீதியை நிலைநாட்ட முக்கிய இரண்டு விடயங்கள் அவசியமாகும்: முதலாவதாக, தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில் வீடற்ற மக்கள் தற்காலிக குடியிருப்புகளை அமைப்பதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும்; இந்த உரிமை தற்போது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. இரண்டாவதாக, இராணுவத்திலிருந்து விலகி வந்தவர்களைக் கொண்டு தோட்ட நிர்வாகங்கள் வன்முறைப் படைகளை உருவாக்கக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், உரிமையும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





