அரசியல் தரப்பினர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடு
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் தரப்பினர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் மறைமுகமாக செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
கோட்டை நீதிவான் பசன் அமரசேனவின் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவ்விடயத்தினை நீதிமன்ற தெரிவித்திருந்தனர்.
உயிர் தன ஞாயிறு பயங்கரவாத குண்டு தாக்குதலின் மறைக்கப்பட்ட அரசியல் பின்னணியை வெளிக்கொணர சி.ஐ.டி. விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி துவான் சுரேஷ் சாலே, தனது மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் கடவுச்சொற்களை வழங்க மறுத்து விசாரணைகளை முடக்கியுள்ளார்.
பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து முக்கிய சாட்சியான அசாத் மௌலானாவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், தீவிரவாதிகளை சுரேஷ் சாலே எவ்வாறு இயக்கினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய விடயங்கள் வெளிவந்ததை அடுத்து, விசாரணைகளைத் தவிர்த்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சுரேஷ் சாலே திட்டமிட்டு உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சார்பாக உதயகம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் தரப்பினர் ஊடகங்கள் வாயிலாக அசாத் மௌலானாவின் சாட்சியத்தை பொய் என சித்தரித்தும், அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தும் வகையிலும், சி.ஐ.டி.க்கு எதிராக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில். பிரசாரங்களை மேற்கொண்டு விசாரணைகளைச் சீர்குலைக்க முயல்கின்றனர்.
ஆகையால் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதிலும், சாட்சியாளர்கள் நீதிமன்றம் முன்னிலையாகவதிலும் கடுமையான இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.





