இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம்
இந்த விஜயத்தின் போது முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய ஆகியோருடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளையதினம் இருநாள் உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய ஆகியோருடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதோடு, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியையும் சந்திக்கவுள்ளார்.
அதேநேரம், மலையகத் தலைவர்களை தனியாக சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆறு தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிடவும், பொதுஜனபெரமுனவின் தலைவர்களையும் ஏனைய பெரும்பான்மைக்கட்சியின் சில தலைவர்களையும் சந்திக்கவுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடனும் சந்திப்புக்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவனது, இலங்கையில் தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனத்தங்களுக்கு சாகர் பந்து திட்டத்தின் கீழாக உடனடியாக மீட்புக்குழு, நிவாரணங்கள், பாதை மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை உடனடியாக முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையின் மீள் கட்டுமானங்களுக்கான மேலதிக உதவித்திட்டங்கள் உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விஜயத்தின்போது அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம், திடீர் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தரும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய நெருக்கடியான சந்திப்பு நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக போதுமான நேர ஒதுக்கீடு காணப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த களவிஜயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான உறுதிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை.
இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய டில்லிக்குச் சென்றிருந்த வேளையில் இறுதியாக வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோக பூர்வ சந்திப்பை மேற்கொண்டிருக்கும் இல்லையில் இந்த ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.





