இலங்கையில் இரு அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜப்பான் 2.6 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பெண்களின் பாலின உணர்திறன் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் செயற்திட்டத்துக்காக 1.16 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நலிவடைந்த மற்றும் இலகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் சமூகங்களின் காலநிலைசார் மீண்டெழும் திறனை ஊக்குவிப்பதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்குமான இரண்டு புதிய திட்டங்களை அறிவித்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென அதன் மேலதிக வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக 2.6 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய திட்டங்கள், இயற்கை அனர்த்தங்களிலிருந்து நிலையான மீட்சி மற்றும் நாடளாவிய ரீதியில் சகலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி என்பவற்றுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கும் என ஐ.நா அபிவிருத்தித் திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி காலநிலை சமநிலையுடனான பால் பண்ணை கட்டமைப்பை நிறுவுதல் தொடர்பான முதலாவது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 1.5 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உமிழ்வைக் குறைத்தல், பால் உற்பத்தியை அதிகரித்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடையே தகவமைப்புத்திறனை உருவாக்குதல் என்பன உள்ளடங்கலாக பசுமைத் தொழில்நுட்பங்கள், நிலையான விவசாய முறைகள் மற்றும் சந்தை தீர்வுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சு என்பவற்றின் கொள்கை வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியின் ஊடாக 750 சிறுதொழில் பால் பண்ணையாளர்கள் நேரடியாகப் பயனடைவர் எனவும், குடும்ப உறுப்பினர்கள், ஆர்வமுள்ள இளம் விவசாய தொழில்முனைவோர், கால்நடை உத்தியோகத்தர்கள், விலங்கியல் நிபுணர்கள், உள்ளுர் பால் சேகரிப்பாளர்கள் என சுமார் 5000 க்கும் மேற்பட்டோரை மறைமுகமாக சென்றடையும் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பெண்களின் பாலின உணர்திறன் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் செயற்திட்டத்துக்காக 1.16 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றல் பணிகளில் ஈடுபடும் பெண்களின் செயற்திறன் மேம்படுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சமூகங்கள் மத்தியில் நிலையான வாழ்வாதார மீட்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான இலக்கு என்றும் அத்திட்டம் தெரிவித்துள்ளது.





