ஈரானிய வெளிவிவகார அமைச்ச ருடன் அமைச்சர் விஜித்த ஹேரத் பேச்சு
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செய்யெத் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செய்யெத் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்த வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், பிராந்திய அமைதியை மீளுறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரானின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் நீட்சியாக, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' போர்க்கப்பல் இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 மைல் தொலைவில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து இலங்கையிலும் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியிருக்கும் பின்னிணியில், மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செய்யெத் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தீவிரமடைந்துவரும் பகைமை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியதுடன் பிராந்திய அமைதியை மீளுறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





