ஈரானை அவமதிப்பது முறையான வெளியுறவுக் கொள்கையல்ல: பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஒரு நாளைக்கு 8 இலட்சம் லீட்டர் டீசலை மேலதிகமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எமக்கு உதவி செய்யும் நட்பு நாடுகளை அவமதிப்பது முறையான வெளியுறவுக் கொள்கையல்ல எனவும், ஈரான் தொடர்பில் அரசாங்கம் வெளியிடும் கருத்துகள் அந்த நாட்டுக்கு இழைக்கப்படும் அவமரியாதை எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், எமக்கு உதவும் நட்பு நாடுகளை இதுபோன்று ஒருபோதும் அவமதித்திருக்க மாட்டோம். அண்மையில் இலங்கை வந்த ஈரான் கப்பல் குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் மிகவும் தெளிவான கருத்தை முன்வைத்திருந்தார். இலங்கைக் கடற்படைத் தளபதியின் நேரடி அழைப்பின் பேரில், ஒரு நட்பு ரீதியான பயணமாகவே அந்தக் கப்பல் இலங்கை வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பாகும்.
எனினும் அவ்வாறானதொரு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கூறுவது முற்றிலும் தவறானது. ஈரான் தூதுவரின் கூற்றை அரசாங்கம் பொய்யெனக் கூறுவது நூறுவீதம் தவறான செயலாகும். ஈரானிடம் சென்று எரிபொருள் உதவி கோருகிறோம், அவர்களும் இலங்கையை ஒரு நட்பு நாடாகக் கருதி எமக்கு உதவ முன்வருகின்றனர். இலங்கைக்குத் தேவையான எரிபொருளைக் கொண்டுவரும் கப்பல்களுக்கு எவ்வித இடையூறும் செய்யமாட்டோம் என ஈரான் உறுதியளித்துள்ளது. அங்குள்ள எமது நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் எமக்கு உதவும் ஒரு நாட்டின் தூதுவர் கூறும் கருத்தைப் பொய்யெனக் கூறி அவர்களை அவமதிப்பது முறையான இராஜதந்திரம் அல்ல. அது ஈரான் அரசாங்கத்தின் கன்னத்தில் அறைவது போன்ற செயலாகும். இவ்வாறான பொறுப்பற்ற வெளியுறவுக் கொள்கையை நாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மேலும் தற்போதைய அரசாங்கம் எந்தவொரு புதிய திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த அதே எரிபொருள் விலை சூத்திரத்தையே இவர்களும் பின்பற்றுகின்றனர்.
குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாக்க முறையான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு ஒன்றை உருவாக்க இவர்களால் முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. நிலக்கரி மோசடி காரணமாக இன்று நாட்டு மக்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஒரு நாளைக்கு 8 இலட்சம் லீட்டர் டீசலை மேலதிகமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். பொதுமக்களின் நியாயமான போராட்டங்களை நசுக்க அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் கொண்டுவர முயற்சிக்கின்றது. இது 1979 ஆம் ஆண்டின் சட்டத்தை விட பத்து மடங்கு ஆபத்தானது. இவ்வாறான அடக்குமுறைகள் மூலம் மக்களின் குரலை ஒடுக்க முடியாது என்றார்.





