உடனடி அச்சுறுத்தல்களின்றி பயங்கரவாத தடை சட்டத்தைப் பிரயோகிப்பது - அலி சப்ரி
முரணான நடைமுறைகள் மீண்டும் தொடர்வதைத் தடுப்பதற்குமே தெரிவாகியிருக்கிறது என்றே நம்மில் பலர் நம்பினோம்.
பயங்கரவாதம் அல்லது கிளர்ச்சி போன்ற உடனடி அச்சுறுத்தல்கள் இல்லாதபோது பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பது, சாதாரண பொதுச்சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதையே காண்பிக்கிறது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுச்சிப்பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகர் சங்கீர்த்தனன் (24) பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் அலி சப்ரி மேலும் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதம் அல்லது கிளர்ச்சி போன்ற உடனடி அச்சுறுத்தல்கள் இல்லாதபோது பயங்கரவாத தடை சட்டத்தைப் பிரயோகிப்பது, சாதாரண பொதுச்சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதையே காண்பிக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலக்கானது நீதியை நிலைநாட்டுவதிலிருந்து, உரியவாறான நீதித்துறை நடைமுறைகளின்றி வலுகட்டாயமாகத் தடுத்துவைப்பதற்கும், உரிய சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக சிறையில் அடைப்பதற்கும், துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் வாய்ப்பளிக்கக்கூடிய அதிகாரத்தை நோக்கித் திரும்புகிறது.
தற்போதைய அரசாங்கமானது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும், அதிகாரப்பகிர்வுக்கு மதிப்பளிப்பதற்கும் மற்றும் அதற்கு முரணான நடைமுறைகள் மீண்டும் தொடர்வதைத் தடுப்பதற்குமே தெரிவாகியிருக்கிறது என்றே நம்மில் பலர் நம்பினோம். இந்த விமர்சனங்களை 'சலவை' செய்வதற்கு முன்னர் ஒன்றைக் கூற விரும்புகிறேன். கடந்த காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு கடந்தகால மீறல்களை முன்னிலைப்படுத்துவதானது, தற்போதும் அவற்றைத் தொடர்வதற்கான நியாயப்பாடாகாது எனக் குறிப்பிட்டுள்ளார்.





