உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நிலையில் நாடு - இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
'நாணயமாற்று வீதமானது வெளியக அழுத்தங்களுக்கு அமைவாகக் கேள்வியைக் கையாள்வதற்கும், அதனூடாக நாட்டின் நிதியியல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஏதுவான வகையில் பேணப்படும்' என்றும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பூகோள அரசியல் நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய, ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான நிலையில் நாடு இருப்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார்.
'ப்ளும்பேர்க்' சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின்போது மேற்கண்டவாறு உத்தரவாதமளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 7 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாணயக்கையிருப்பு உள்ளடங்கலாக போதிய நிதிக்கையிருப்பு இலங்கையிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது, தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விநியோகச்சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள் என்பவற்றுக்கு மத்தியில், நாட்டுக்குக் குறிப்பிடத்தக்களவு பாதுகாப்பை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், தற்போது 1.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதன் ஊடாக நாட்டின் உள்ளகப் பணவீக்க சூழல் சாதகமான விதத்தில் நிலைமாற்றமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறைந்த மட்டத்திலான பணவீக்கமானது உள்நாட்டுப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை சீர்குலையாதவாறு வெளியக விலை அழுத்தங்களைக் கையாள்வதற்கான இடைவெளியை மத்திய வங்கிக்கு அளிக்கும் என விளக்கமளித்தார்.
'நாணயமாற்று வீதமானது வெளியக அழுத்தங்களுக்கு அமைவாகக் கேள்வியைக் கையாள்வதற்கும், அதனூடாக நாட்டின் நிதியியல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஏதுவான வகையில் பேணப்படும்' என்றும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டம் தொடர்பான ஐந்தாம் கட்ட மீளாய்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில், 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அம்மீளாய்வு பிற்போடப்பட்டது. இந்நிலையில் ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்ட மீளாய்வுகளை ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கு நாணய நிதியத்தின் இயக்குனர் சபையிடம் அனுமதிகோர உத்தேசித்திருப்பதாகவும், இம்மீளாய்வு அநேகமாக மே மாதமளவில் நடைபெறும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.





