உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்க இலங்கை தயார் - அமைச்ச அநுர கருணாதிலக தெரிவிப்பு
உலகளாவிய நிச்சயமற்ற ஒரு காலத்தில், நெருக்கடியைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டாமல், வர்த்தகப் போக்குவரத்து தடையின்றி, திறமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்குப் பங்களிக்க இலங்கை தயாராக உள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற காலத்தில், நெருக்கடியைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டாமல், வர்த்தகப் போக்குவரத்து தடையின்றி, திறமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்குப் பங்களிக்க இலங்கை தயாராக உள்ளதென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் ஷாங்காய் சென்ஹுவா ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுக்கு இடையிலான கொள்முதல் ஒப்பந்த நிகழ்வு 26-03-2026 அன்று அம்பாந்தோட்டை ஹில்டன் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2025ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் 8.24மில்லியன் தொன் இறக்குமதிகளைக் கையாண்டது. அதேநேரத்தில், 428,000கொள்கலன் செயற்பாடுகள் பதிவு செய்துள்ளன, இது அம்பாந்தோட்டையை பிராந்திய மீள் ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படிக்கல்லாகும்.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக கைத்தொழில் பூங்கா அதன் முதல் தொழிற்சாலையைச் செயற்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதுடன், முதல் ஆண்டிலேயே சுமார் 1,000 கொள்கலன்களை உருவாக்கியுள்ளது. இச்சாதனையானது, வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் தளவாட மையமாக அம்பாந்தோட்டை பெற்று வரும் ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
கையெழுத்து நிகழ்வு மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகும். 106 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம், ஷாங்காய் சென்ஹுவா ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து, கிரேன்கள் உள்ளிட்ட மேம்பட்ட முனைய உபகரணங்களைக் கொள்முதல் செய்யவுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட உலகளாவிய வர்த்தகம் பெருகிய முறையில் நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டிருக்கும் வேளையில், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் சுயஸ் கால்வாய் போன்ற முக்கிய கடல்சார் வழிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட வலைப்பின்னல்களில் நெகிழ்ச்சி, நம்பகத்தன்மை மற்றும் பல்வகைப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
இந்த வளர்ந்து வரும் சூழலில், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதில், மாற்றாக அல்லாமல், ஒரு நம்பகமான மற்றும் நிலையான பங்காளியாக முன்வர இலங்கை தனித்துவமான நிலையில் உள்ளது.
எமது துறைமுகங்கள், குறிப்பாக கொழும்பு துறைமுகம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை மீள்ஏற்றுமதி மற்றும் கடல்சார் சேவைகளுக்கான பாதுகாப்பான, திறமையான மற்றும் போட்டித்தன்மை மிக்க மையங்களாகச் செயற்;பட மூலோபாய ரீதியாக அமைந்துள்ளன.
எரிபொருள் நிரப்புதல் மற்றும் கப்பல் திருத்தம் முதல் பணியாளர் மாற்றம் மற்றும் தளவாட ஆதரவு வரை, முழுமையான கடல்சார் தீர்வுகளை வழங்கும் திறனை நாம் மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக அம்பாந்தோட்டை, உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நவீன, ஒருங்கிணைந்த துறைமுகம் மற்றும் கைத்தொழில் சூழல் மண்டலமாக உருவாகி வருகிறது.
இந்த இலக்குகளை அடைய, நாம் திறனை அதிகரிக்கவும், சேவை நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும் வலுவான மூலோபாயக் கூட்டாண்மைகளைத் தொடர்ந்து தேட வேண்டும். அதேவேளையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், எதிர்காலத்திற்குத் தயாரான கடல்சார் துறையை உருவாக்கத் தேவையான மனித வளத்தை மேம்படுத்தவும் வேண்டும்.
உலகளாவிய நிச்சயமற்ற ஒரு காலத்தில், நெருக்கடியைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டாமல், வர்த்தகப் போக்குவரத்து தடையின்றி, திறமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்குப் பங்களிக்க இலங்கை தயாராக உள்ளது.
இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்து செயற்படவும், இந்தியப் பெருங்கடலின் முன்னணி கடல்சார் மையமாக இலங்கை உருவெடுப்பதில் பங்குதாரர்களாக மாறவும் உலகெங்கிலும் உள்ள கடல்சார் பங்குதாரர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.





